திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு மாடு முட்டி உரிமையாளர் பலி

*போலீஸ்காரர் உள்பட 52 பேர் காயம்

திருவெறும்பூர் : திருச்சி திருவெறும்பூர்  அருகே பெரியசூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி உரிமையாளர் இறந்தார். திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அருகே பெரியசூரியூர் கிராமத்தில் ஸ்ரீநற்கடல்குடி  கருப்பணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நேற்று  நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வைத்தார்.  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து  போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் 480 காளைகள், 258 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.  இந்தநிலையில்  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு காளையை கொண்டு வந்தபோது  ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் (30) என்பவர்  மீது அவரது மாடே பாய்ந்து முட்டியது. இதில் படுகாயமடைந்த அவரை திருச்சி அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

 மேலும்  மாடு முட்டியதில் போலீஸ்காரர் கலைவாணன்(32) உட்பட 52 பேர் காயம் அடைந்தனர்.போட்டியில் 12  காளைகளை அடக்கிய புதுக்கோட்டை திருநல்லூரை சேர்ந்த யோகேஷ் என்ற வாலிபருக்கு முதல் பரிசு பைக்கும், 2ம் பரிசாக  பூலாங்குடியை சேர்ந்த மனோஜ்க்கு கலர் டிவியும் வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த  காளைக்கு முதல்பரிசு கைக்குறிச்சி தமிழ்செல்வன் என்பவருக்கு பைக் வழங்கப்பட்டது.

Related Stories: