கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு ஒன்றிய பாதுகாப்பு துறை ஊழியர் வெட்டி கொலை

பல்லாவரம் : குன்றத்தூர், சம்பந்தம் நகர், சந்தோஷ் அவென்யூ பகுதியை சேர்ந்தவர்  பத்மகுரு (37). அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சிந்து (30). தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குன்றத்தூர், முத்தாலம்மன் கோயில் தெருவில் வசிக்கும் ரஜினி மனைவி மீனா (29) என்பவருடன்,   பத்மகுருவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி அறிந்த அவரது மனைவி சிந்து, 2 நாட்களுக்கு முன், மீனா வீட்டிற்கு சென்று அவரை எச்சரித்துள்ளார்.  இதில் ஆத்திரமடைந்த மீனா, தனது உறவினர் விஸ்வா  (29) மற்றும் ஆவடி டேங்க் பேக்டரி ஊழியர்  குமரன் (33) உள்பட 6 பேருடன் ஆட்டோவில் பத்மகுரு வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த பத்மகுரு,  சமையலறையில் இருந்த இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து வந்து குமரன், விஸ்வா ஆகிய  இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இதில், வழியிலேயே குமரன் இறந்தார். விஸ்வா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, குன்றத்தூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து, பத்மகுருவை கைது  செய்தனர்.

Related Stories: