சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளில் ஆணையர் நேரில் ஆய்வு

*சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்

சென்னை : சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டு, பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும், தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திற்கு ஆலோசனை வழங்கவும் மாநகராட்சி சார்பில் ஒரு மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 தொலைபேசி ஆலோசனை மையங்கள்  மற்றும் ரிப்பன் மாளிகையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கிருந்து தொலைபேசி அழைப்பாளர்கள், வீட்டுத் தனிமையில் உள்ள நபர்களிடம் சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் தொண்டை வலி போன்ற கொரோனா தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருக்கிறதா என கேட்டறிந்து, 5 நாட்களுக்கு மேல் அவர்களுக்கு அறிகுறிகள் தொடர்ந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல ஆலோசனை வழங்குகின்றனர்.

அதன்படி இந்த மையங்களிலிருந்து கடந்த 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 1,51,124 தொலைபேசி அழைப்புகள் மூலம் உடல்நிலை குறித்து கேட்டறியப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில்  செயல்பட்டு வரும் தொலைபேசி ஆலோசனை  மையத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்  சிங் பேடி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து வார்டு 110, 3வது  குறுக்கு தெருவில் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தொற்று  பாதித்த நபர்களிடம், மாநகராட்சி தொலைபேசி ஆலோசனை மையங்களில் இருந்து  நாள்தோறும் அழைப்புகளின் மூலம் உடல்நிலை குறித்த தகவல்கள் கேட்கப்பட்டு  ஆலோசனை வழங்கப்படுகிறதா? முன்களப்பணியாளர்கள் மூலம்  நாள்தோறும் வந்து  தேவையான மருத்துவ மற்றும் அடிப்படை தேவைகள் வழங்குகின்றனரா? என்று  கேட்டறிந்தார். துணை ஆணையர் மனிஷ், மத்திய வட்டார துணை  ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், மண்டல அலுவலர் ஜெயச்சந்திரன்  ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: