×

சிஎம்டிஏ, மாநகராட்சி அனுமதி வழங்கியது மெரினாவில் கலைஞர் நினைவிட ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்

சென்னை :முன்னாள் முதல்வர் கலைஞர் கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கலைஞரின் அரும்பணிகளை போற்றும் விதமாக அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை வருங்கால தலைமுறை அறியக்கூடிய வகையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ₹39 கோடியில் நினைவிடம் அமைக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 24ல் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இந்த நினைவிடத்துக்கு பொதுப்பணித்துறை ஆர்க்கிடெக்ட் பிரிவு வடிவமைத்த கட்டுமான வரைபடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்தார்.

இந்த வரைபடம், கலை, இலக்கியம், அரசியலில் முத்திரை பதித்ததன் அடையாளமாக கலைஞர் நினைவிடத்தில் மூன்று வளைவுகள் ஏற்படுத்தப்படுகிறது. கலைஞர் பயன்படுத்திய ஒரிஜினல் பேனாவை வைத்து நினைவிடத்திற்கு முன்புறம் மிகப்பெரிய அளவில் பேனா வைக்கப்படுகிறது. அண்ணாவின் தம்பி கலைஞர் என்பதை குறிக்கும் வகையில் இந்த வளைவு அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ₹39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நினைவிட கட்டுமான பணி கடற்கரை பகுதி அருகே மேற்கொள்ளப்பட இருக்கிறது. குறிப்பாக, 40 சென்ட் நிலம்தான் கடற்கரை பகுதி அருகே வருகிறது. எனவே, கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய மண்டலத்திடம் 40 சென்ட் நிலத்தை எடுக்க அனுமதி கேட்டு பொதுப்பணித்துறை விண்ணப்பித்தது. முதற்கட்டமாக மாவட்ட கடற்கரை ஒழுங்கு முறை மண்டல ஆணையம் அனுமதி அளித்தது. தொடர்ந்து, மாநில கடற்கரை ஒழுங்கு முறை ஆணையத்திடம் விண்ணப்பித்தது.

அதன்பேரில், வடகிழக்கு பகுதியில் 40 சென்ட் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள சுற்றுச்சுவர், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைப்பதற்கான கூடுதல் தரவுகளை மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம், மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையம் கலைஞர் நினைவிடம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ந்து சிஎம்டிஏ, மாநகராட்சி, காவல்துறை,  வருவாய் துறை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இதனால், நினைவிடத்தின் ஆரம்பகட்ட பணிகளை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக நினைவிட வளாகத்தில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, தகரம் மூலம் செட் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் சார்பில் பூமி பூஜை போடப்பட்டு கலைஞர் நினைவிட கட்டுமான பணிகள் முழு வீச்சில்  தொடங்கப்படும்.

Tags : CMDA , Kalaignar Memorial, Construction,Chennai Marina
× RELATED அடுக்குமாடி குடியிருப்பு.. அனைத்து...