×

கோவிட் போரில் பெண் தலைவர்கள்!

நன்றி குங்குமம் தோழி

தொழில்நுட்பம் மருத்துவம் பொருளாதாரம் என அனைத்திலும் முன்னேறியதாகக் கருதப்படும் அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகள், கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் போதிய மருத்துவ சாதனங்களும் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். ஆனால் ஜெர்மனி, நியூசிலாந்து, தைவான், பின்லாந்து போன்ற நாடுகள் இந்த வைரசைக் கட்டுப்படுத்துவதில் முன்னோடிகளாக விளங்குகின்றன. இந்த அனைத்து நாடுகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை அந்நாட்டை தலைமை தாங்குவது பெண் தலைவர்கள்
என்பதுதான்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. குணமாக்க மருத்துவமும் இல்லை. ஆனால் மக்கள் விழிப்புணர்வுடன் விலகி இருத்தல் மூலம் நோய் பரவாமல் தடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நேரத்தில் சிறப்பான சிகிச்சை அளித்து அவர்களது உயிரைக் காக்க முடியும். இதை வெற்றிகரமாக செய்து முடிக்க அரசாங்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. நம் பெண் தலைவர்கள், அவர்களது நாட்டில் வைரஸ் பரவாமல் தடுக்க எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலக அரங்கில் பாராட்டப்பட்டு, பிற நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெசிண்டா ஆர்டன்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் எலிமினேஷன் (நீக்குதல்) முறை என்ற தந்திரத்தை பயன்படுத்தி தன் மக்களை காத்தார். நாட்டில் கொரோனா பாதிப்பு ஆரம்பிக்கும் முன்பே சர்வதேச விமானங்களை ரத்து செய்ததுடன் சுற்றுலாப் பயணிகளையும் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி சர்வதேச இணைப்புகளை துண்டித்தார். ஆரம்பத்திலேயே கடுமையான விதிகளுடன் ஒரு மாதக் கால ஊரடங்கை அறிவித்ததால் சுமார் இரண்டாயிரம் மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு, உயிர் பலி எண்ணிக்கையும் இருபதிற்குள்ளேயே இருக்கிறது. வைரஸ் சோதனைகள் அதிக அளவிலும் கூடுதல் வேகத்திலும் செய்யப்பட்டன. மார்ச் மாதமே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு அத்தியாவசிய நிறுவனங்களும், தொழில்களும் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டன.

வைரஸ் பரவ தொடங்கும் முன்பே மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. சமூக விலகல்கள் மற்றும் மக்கள் வீட்டில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டனர். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆரம்பத்திலேயே இவை கடைப்பிடிக்கப்பட்டதில், வெளிநாட்டிலிருந்து பயணம் செய்தவர்களுக்கு மட்டுமே அதிக பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அவர்களை சுலபமாகக் கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து குணமாக்க முடிந்தது. இன்று நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

ஏஞ்சலா மெர்கல்

ஜெர்மனியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பலியானவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பிற நாடுகளைவிட ஜெர்மனியில் பலியானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க காரணம் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் எடுத்த முயற்சிதான். ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்ட மக்கள் கண்டறியப்பட்டு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் சோதனை செய்யப்பட்டனர். ஜெர்மனியில் பலியானவர்களின் சராசரியான வயது 47, ஆனால் இத்தாலியிலும் அமெரிக்காவிலும் 60 வயதான முதியவர்களே அதிகம் பலியாகி உள்ளனர். வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களை மட்டும் தனிமைப் படுத்தியதால் நோயின் தீவிரம் பரவாமல், வயதானவர்களை இழக்கும் நிலைமை தவிர்க்கப்பட்டது.

கொரோனா குறித்து மக்கள் அறியும் முன்பே, ஜெர்மனியில் டாக்சி முறை சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் நோய்க்கான சோதனை கருவிகள், அது குறித்த விவரங்களையும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதனால் அங்கு முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டபோதே போதுமான சோதனை கருவிகள் உருவாக்கப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டிருந்தன. மக்களை வீடு தேடிச் சென்றும், டிரைவ்-இன் மூலமாகவும் இலவச சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பல நாடுகளில் தொற்றுநோய்கள் அறிகுறிகளுடன் வரும் மக்களை மட்டுமே சோதனை செய்தபோது, ஜெர்மனியில் இலவசமாக அறிகுறிகள் இல்லாத மக்களுக்கும் சோதனை செய்யப்
பட்டது.

சாய் இங்-வென்

சீனாவிற்கு மிக அருகில் அமைந்திருக்கும் தைவானில் 2.4 கோடி மக்கள் வசிக்கின்றனர். தைவான் நாடு சார்ஸ் வைரஸ் போராட்டத்தில் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடத்தைதான் கோவிட்டிற்கு எதிரான போரில் உபயோகித்து, பாதிப்பு அதிகரிக்காமல் காத்திருக்கிறது. தைவானின் ஜனாதிபதியான சாய் இங்-வென், ஜனவரி மாதத்திலேயே எல்லையில் கடுமையான விதிமுறைகளை அறிவித்து, சர்வதேச தொடர்புகளைக் குறைக்க ஆரம்பித்தார். மக்களும் நோய்த்தொற்று ஆரம்பிக்கும் முன்பே தெருக்களில் முகக்கவசம் அணிந்து சுகாதாரத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினர். வூஹானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த போதே தைவானில் இதற்கான திட்டங்களும், கலந்துரையாடல்களும் அரசாங்கம் மேற்கொண்டது. நாடு முழுவதும் கொரோனா சோதனையும், இதற்கு முன் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு சோதனை செய்யப்பட்டது.

தவறான செய்திகள் பரப்புவோர் மீதும், ஊரடங்கை மீறுவோர் மீதும் கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டது. மருத்துவக் குழுவுடனும், ஆராய்ச்சியாளர்களுடனும் தினமும் கலந்து பேசி அவர்களின் அறிவுரைகள் கடைப்பிடிக்கப்பட்டன. இதனால் பாதிப்பு குறைந்து ஒரு கோடி முகக்கவசங்களை அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளுக்கு அனுப்புவதாகப் பிரதமர் அறிவித்தார். மேலும் வைரஸை கட்டுப்படுத்தும் குயினின் என்ற மருந்தும் அதிக அளவில் வினியோகம் செய்யப்பட்டு தங்களுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கு வழங்கப் போவதாகவும், நோய் கண்டறிந்து ஆராயும் தொழில்நுட்பமும் பகிரப்படும் எனவும் தைவான் பிரதமர் சாய் இங்-வென் அறிவத்துள்ளார். தங்கள் நாட்டு மக்களை காத்து, தற்போது பிற நாட்டு மக்களை காக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது தைவான்.

சன்னா மரின்

உலகிலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக தொடர்ந்து மூன்று முறை அறிவிக்கப்பட்ட பின்லாந்தின், உலகிலேயே இளம் பிரதமராக சன்னா மரின் கடந்த டிசம்பர் மாதம் பதவியேற்றார். இவரது ஆட்சி ஆரம்பம் முதலே பல விமர்சனங்கள் செய்யப்பட்டது. ஆனால் மோசமான காலங்களில்தான் ஒரு தலைவரின் உண்மையான தலைமை வெளிப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சன்னா மரின் ஆட்சி இந்த அவசரக் காலத்தில் சிறந்து விளங்கி வருகிறது. உலகப்போருக்கு பின், பின்லாந்து, மருத்துவத்திற்கும் ஆராய்ச்சிக்கும் அதிக கவனம் செலுத்தியது, இதனால் இவர்களிடம் போதுமான மருத்துவ தொழில்நுட்ப கருவிகளும், சாதனங்களும் இருக்கின்றன. பல நாடுகளில் முகக்கவசத்திற்கே தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் பின்லாந்திடம் போதுமான மருத்துவர்களும் மருத்துவ சாதனங்களும் இருப்பது பெரிய ஆதாயம்.

34 வயதான சன்னா மரின், சமூக வலைத்தளத்தின் உதவியுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சோசியல் மீடியாவில், அனைத்து வயது பிரபலங்களுடன் இணைந்தும் இதைச் செய்து முடித்தார். அனைவருக்கும் புரியும் விதமாக எளிய மொழியில் இந்நோயின் தீவிரத்தை அவர் எடுத்துரைத்ததால் மக்களும் நோயின் தீவிரத்தை உணர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பு தந்தனர். பின்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 85% மக்கள் பிரதமர் சன்னா மரின் இந்த கடுமையான சூழலில் மேற்கொண்ட முடிவுகள் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். இது மக்கள் பிரதமர் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கையைக் காட்டுகிறது.

பெண் தலைவர்கள் மட்டுமில்லாமல், மருத்துவத்திலும், உணவு தயாரிப்பிலும் கூட பெண்களே உலகில் அதிக சதவீதம் பணியாற்றுகின்றனர். இதில் செவிலியர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. பெண்கள் வேலைக்கு செல்வதும், படிப்பதுமே இன்றும் பல நாடுகளில் கேள்விக்குறியாக இருக்கும் போது, அதில் சில பெண்கள் உலக மக்களை காக்க பொறுப்புடன் தன்னலம் கருதாமல் உழைப்பது பாராட்டுக்குரியது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Leaders ,Battle of Kovit ,
× RELATED விநாயகர் சதுர்த்தியை பாதுகாப்புடன்...