×

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த ஆண்டு 11 நீதிபதிகள் ஓய்வு : நீதிபதிகள் எண்ணிக்கை குறையும்

* ஏற்கனவே 15 இடங்கள் காலியாக உள்ள நிலையில்


சென்னை : சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளில் இந்த ஆண்டு மட்டும் 11 நீதிபதிகள் ஓய்வு பெறவுள்ளனர். இந்தியாவின் பாரம்பரிய உயர் நீதிமன்றங்களில் கொல்கத்தா, மும்பைக்கு அடுத்து 3வது பெரிய நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம். ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவின் உச்ச நீதிமன்றமாக செயல்பட்ட பெருமையும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உண்டு. பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்திய அளவில் பல முன்னுதாரண தீர்ப்புகளையும் வழங்கியுள்ளது.


 இவ்வளவு பெருமை பெற்றுள்ள சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் செல்லும் ஒரு முக்கிய வாயிலாகவும் திகழ்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் நீதிபதிகளில் பெரும்பாலானோர் உச்ச நீதிமன்றத்திற்கு செல்வது ஒரு எழுதப்படாத விதியாகவே இருந்து வந்தது. சில காரணங்களுக்காக ஓரிரு தலைமை நீதிபதிகளுக்கு மட்டுமே உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

நாட்டில் உள்ள பெரிய நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 60 நீதிபதிகள் உள்ளனர். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 75 நீதிபதிகளையும் நியமிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தி வருகிறார்கள்.

தற்போதுள்ள நீதிபதிகளில் 17 நீதிபதிகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க செல்வதால் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில் 43 நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிக்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்துவருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் 11 நீதிபதிகள் ஓய்வு பெறவுள்ளனர். முதலாவதாக வரும் பிப்ரவரி 27ம் தேதி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஓய்வு பெறுகிறார். அதை தொடர்ந்து ஏப்ரல் 23ல் நீதிபதி பார்த்திபன், மே மாதம் நீதிபதிகள் பாரதிதாசன், பொங்கியப்பன், கோவிந்தராஜன், கல்யாணசுந்தரம் ஆகியோரும், ஜூலையில் நீதிபதிகள் கண்ணம்மாள், ஆனந்தி ஆகியோரும், செப்டம்பர் மாதம் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, மூத்த நீதிபதி எம்.துரைசாமி ஆகியோரும், டிசம்பர் மாதம் நீதிபதி பரேஷ் உபாத்யாவும் ஓய்வு பெறவுள்ளனர்.

இந்த ஆண்டு 11 நீதிபதிகள் ஓய்வு பெறும் நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 41 ஆக குறைந்துவிடும். எனவே, புதிய நீதிபதிகளை தேர்வு செய்து நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : Chennai High Court , Chennai high Court, madras high court, honorable Judges
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...