அரசின் விதிமுறையை மீறிய விஜிபி பொழுதுபோக்கு பூங்காவுக்கு சீல்

*₹15 ஆயிரம் அபராதம்

துரைப்பாக்கம் : அரசின் அனுமதியில்லாமல் இயங்கிய விஜிபி பொழுதுபோக்கு பூங்காவுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அரசின் உத்தரவை மீறியதால் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் தொற்றும் பொதுமக்களை மிரட்டி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் சுற்றுலா தலங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவுக்கு சொந்தமான மீன் அருங்காட்சியகம், கொரோனா தளர்வுகளை மீறி திறந்து மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சோழிங்கநல்லூர் மண்டல அதிகாரிகள், நீலாங்கரை போலீசார், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். தமிழக அரசின் உத்தரவை மீறி மீன் அருங்காட்சியம் திறக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, மீன் அருங்காட்சியகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அரசின் உத்தரவை மீறியதால் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related Stories: