×

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1,51,124 பேருக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை

சென்னை  : பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்கள் மற்றும் தலைமையிடத்தில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையங்களிலிருந்து  கடந்த 10 நாட்களில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு  1,51,124 அழைப்புகள் மூலம் உடல்நிலை குறித்து கேட்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்கள் முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கு (Screening Centers) மாநகராட்சியின்  கோவிட் சிறப்பு வாகனங்களின் மூலம் அழைத்து செல்லப்பட்டு, பரிசோதனைகளுக்கு பிறகு தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும், தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திற்கு ஆலோசனை வழங்கவும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒரு மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 தொலைபேசி ஆலோசனை மையங்கள் (Tele-Counseling Centers) மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் கட்டடத்தில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொலைபேசி அழைப்பாளர்கள் வீட்டுத் தனிமையில் உள்ள நபர்களிடம் சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் தொண்டை வலி போன்ற கோவிட் தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருக்கிறதா என கேட்டறிந்து 5 நாட்களுக்கு மேல் அவர்களுக்கு அறிகுறிகள் தொடர்ந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல ஆலோசனை வழங்கப்படுகிறது.

மேலும், வீட்டில் கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை உள்ளதா எனவும், அவர்களின் இல்லங்களுக்கு கோவிட் தன்னார்வலர்கள் வருகை தருகிறார்களா எனவும், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் குறித்து கேட்கப்பட்டு அதற்குரிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

மண்டலங்களில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையங்களில் 21 மருத்துவர்கள், 140 தொலைபேசி அழைப்பாளர்கள் மற்றும் தலைமையிடத்தில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையத்தில் ஒரு துணை ஆட்சியர், 2 மருத்துவர்கள் மற்றும் சுழற்சி முறையில் பணிபுரிய 45 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Chennai Municipality , Chennai Corporation, Corona Virus, Tele Callers, Doctors Counselling
× RELATED மக்களவைத் தேர்தலையோட்டி காவலர்கள்...