×

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு: 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் பிரபாகரன்

மதுரை: பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் இன்று காலை தொடங்கி  நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. மொத்தம் 7 சுற்றுகள் நடைபெற்ற போட்டியில் 729 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் புலியூரை சேர்ந்த சூறாவளி என்பவரின் மாடு சிறந்த காளைக்கான பரிசை பெற்றுள்ளார். சிறந்த காளைக்கு காளைக்கு முதலமைச்சர் சார்பாக காரும், முதலிடம் பிடித்த காளையருக்கு திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கப்பட்டது.

இதில் முன்னதாக ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட 729 காளைகள் களத்தில் இறக்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 300 பேர், போட்டி போட்டுக் கொண்டு, காளைகளை அடக்க பாய்ந்தனர். கொரோனா அச்சுறுத்தால் காரணமாக உள்ளூரை சேர்ந்த 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

 பாலமேட்டில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தனர். முன்னதாக அங்குள்ள விநாயகர் கோயிலில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கோயில் காளைகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

அங்கிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று வாடிவாசல் அருகே உள்ள மண்டு புலி சுவாமி கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் முதலாவதாக களமிறங்கும் மடத்து கமிட்டி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து மஞ்சமலை சுவாமி, அய்யனார் சுவாமி, பட்டாளம்மன் சாத்தாவுராயன், மாரியம்மன், பத்திரகாளியம்மன் ஆகிய கோயில்களைச் சேர்ந்த காளைகள் வரிசைப்படி அவிழ்த்து விடப்பட்டன. கோயில் காளைகள் என்பதால், இந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை. இந்த காளைகளுக்கு என அறிவிக்கப்பட்ட பரிசுகளை அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் பெற்று சென்றனர்.

பதிவு செய்யப்பட்டிருந்த 729 காளைகள், கால்நடைத் துறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் ஒவ்வொன்றாக களத்திற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த போட்டியில் 2 காவலர்கள் உட்பட மாடுபிடிவீரர்கள், காளை உரிமையாளர், மற்றும்  பார்வையாளர்கள் என 36 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என முதலிடம் பிடித்த வீரர் பிரபாகர்  கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பர் என்ற நம்பிக்கை உள்ளது என முதலிடம் பிடித்த பிரபாகரன் கூறியுள்ளார்.


Tags : Prabakaran ,Jalikkattu tournament ,Madurai Palamate ,Pongal Tiradu , Pongal Thirunal, Madurai Palamedu, Jallikattu Competition
× RELATED ஜானுவை மறக்க வைத்த செந்தாழினி: கவுரி கிஷன் நெகிழ்ச்சி