அதிமுக பிரமுகர் ஆதரவுடன் கலப்படம் செய்து விற்பனை?..பயோ-டீசல் ஆலையில் அதிரடி சோதனை

ஒட்டன்சத்திரம்: அதிமுக பிரமுகர் ஆதரவுடன் கலப்பட பயோ-டீசல் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் ஆலையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்பு அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். ஆலையில் இருந்த 61 ஆயிரம் பயோ-டீசல் கைப்பற்றப்பட்டு, ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கையை சேர்ந்தவர் மோசஸ். இவர் இப்பகுதியில் கடந்த 10 வருடங்களாக பயோ-டீசல் உற்பத்தி ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் பயோ-டீசலுடன், தொழிற்சாலைகளில் பயன்படுத்திய ஆயிலை கலந்து நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்புவதாக, திண்டுக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் துறை மற்றும் குற்றப்புலனாய்வு துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதனடிப்படையில் நேற்று காலை 8 மணியளவில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு அலுவலர்கள் இந்த ஆலைக்கு வந்தனர். தொடர்ந்து ஆலையில் டேங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பயோ-டீசலை அலுவலர்கள் சோதனை செய்தனர். பின்னர் மோசஸிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு 8 மணி வரை நீடித்தது. பின்னர் ஆலையில் இருந்த 61 ஆயிரம் லிட்டர் பயோ-டீசலை கைப்பற்றி, சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 12 மணி நேரம் நடந்த இந்த அதிரடி சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இது குறித்து காவல்துறையினர் சிலர் கூறுகையில், ‘‘2 தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி பகுதியில் மோசஸின் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களில் கைப்பற்றிய பயோ-டீசல் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை எஸ்பி சீனிவாசன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையில் பயோ டீசல் ஆலையில் ஆய்வு நடந்துள்ளது. அதிமுக பிரமுகர் ஆதரவுடன் கடந்த 10 வருடங்களாக பயோ டீசலில் கலப்படம் செய்து விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆய்வக பரிசோதனை முடிவு வந்த பின்னர் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்’’ என்றனர்.

Related Stories: