×

கொரோனாவை கண்டறிய நடத்தப்படும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யும் அனைவருக்கும் நாளை முதல் இலவச மருந்து தொகுப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: கொரோனாவை கண்டறிய நடத்தப்படும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யும் அனைவருக்கும் நாளை முதல் இலவச மருந்து தொகுப்பு அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகளவில் பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதேபோல், பொதுமக்களுக்கு சளி, உடல் சோர்வு, காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தால் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் முடிவுகளுக்காக காத்திருப்போருக்கும் முடிவு வரும் முன்பே தொற்றை கட்டுப்படுத்த மருந்து தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளும் நபர்களுக்கு மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் மருந்து தொகுப்பு தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வைட்டமின் சி, ஜிங்க், பாராசிட்டாமல் மாத்திரைகள், கபசுர குடிநீர், 3 அடுக்கு முகக்கவசம் என அனைத்தும் அந்த மருந்து தொகுப்பில் இருக்கும். பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்போர் தொற்றை பரவாமல் தடுக்க வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்படுகிறது. மருந்து தொகுப்பில் உள்ள மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று முறையாக எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Tags : RTPCR ,Chennai Corporation , RTPCR, Trial, Tomorrow, Drug Package, Chennai Corporation
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!