×

ரூ.12 ஆயிரம் கோடி மாஸ்டர் பிளான் திட்டத்தில் சேர்ப்பு புதுப்பொலிவு பெறும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம்: 4 வழிச்சாலையோடு இணைக்கும் புதிய சாலை அமைகிறது

நாகர்கோவில்: ஒன்றிய அரசின் ரூ.12 ஆயிரம் கோடி மேம்பாடு திட்டத்தில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையமும் சேர்க்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் அதிக வருமானமுள்ள ரயில் நிலையங்களில் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம். இது ஏ கிரேடு ரயில் நிலையமாகும். இங்கு வருடத்திற்கு சுமார் ரூ. 50 கோடிக்கு மேல் வருமானம் வருவதோடு, தினசரி 13 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 15 பாசஞ்சர் ரயில்களும், 12 வாராந்திர ரயில்களுமாக மொத்தம் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கொரோனாவுக்கு பிறகு பல ரயில்களின் இயக்கம் மாற்றப்பட்டுள்ளன. சில ரயில்கள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளன.

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம், திருவனந்தபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களின் சந்திப்பு ரயில் நிலையமாகவும் உள்ளது. இதனால் இரட்டை ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிந்த பின் சென்னை, திருச்சி, மதுரை, எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரத்தில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாகர்கோவில் வரை நீட்டிக்கவும் நல்ல வசதி, வாய்ப்புகளும் ஏற்பட உள்ளது. இதனை கருத்திற்கொண்டு ரயில்வே இலாகா நாகர்கோவில் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய மாஸ்டர் பிளான் திட்டத்தை தயாரித்து மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. 1, 1 ஏ, 2, 3 என 4 பிளாட்பாரங்கள் உள்ளன. மாஸ்டர் பிளான் திட்டத்தின் படி கூடுதலாக 2 பிளாட்பாரமும்,  தற்போதுள்ள 3 பிட்லைன்களுடன் கூடுதலாக 2 பிட் லைனும், 2 ஸ்டெபிளிங் லைனுடன் கூடுதலாக 9 ஸ்டேபிளிங் லைனும், கூடுதலாக ஒரு சண்டிங் நெக் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன. சண்டிங்  நெக் வசதி என்பது, பணிமனையில் இருந்து நேரடியாக எந்த பிளாட்பாரத்துக்கு ரயில் வர வேண்டுமோ? அந்த பிளாட்பாரத்துக்கு வரும் வசதியை கொண்டதாகும்.

ஏற்கனவே ரூ.450 கோடி என முதற்கட்டமாக திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.  கூடுதல் தண்டவாளங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் பணிகளும் வேகமெடுத்துள்ளன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏற்கனவே பிளாட்பாரம் 1 ல் இருந்து 2 வது பிளாட்பாரத்துக்கு செல்ல மட்டும் எஸ்கலேட்டர் இருந்தது. தற்போது கூடுதலாக 2 மற்றும் 3 வது பிளாட்பாரங்களுக்கு எஸ்கலேட்டர், நடைமேம்பாலம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர லிப்ட் வசதியும் 3 பிளாட்பாரங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கழிவறை வசதிகள் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது பயணிகளுக்கான கழிவறை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கான தங்கும் அறையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் நடந்து வரும் நிலையில், ஒன்றிய அரசு நாட்டில் உள்ள 21 ரயில்நிலையங்களில் மாஸ்டர் பிளான் திட்டம் என்ற பெயரில், ரூ.12 ஆயிரம் கோடியில் மேம்பாட்டு பணிகளை செய்ய உள்ளது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாட்டில் 3 ரயில் நிலையங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இதில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையமும் ஒன்றாகும். இது தவிர மதுரை, ராமேஸ்வரம் ஆகிய இரு ரயில்கள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த மேம்பாட்டு பணிகளின் மூலம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு மேலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தற்போது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் பின்புறம் 4 வழிச்சாலை வருகிறது. இந்த சாலையோடு ரயில் நிலையத்தை இணைக்கும் புதிய சாலை அமைய  இருக்கிறது. அதன் அருகில் 32 ஏக்கரில் 40 கோடியில் பஸ் போர்ட் (விமான நிலைய தரத்துடன் கூடிய) அமையவும் திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகளும் நடைபெறலாம் என்கிறார்கள்.

திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியிலிருந்து வரும் ரயில்கள் ஒரு பிளாட்பாரம் வந்த பின் என்ஜின் மட்டும் மற்றொரு பிளாட்பாரம் வழியாக திரும்பி செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.  இதனால் 2 பிளாட்பாரங்களில் சுமார் 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை  ஏற்படுகின்றது. இந்த குறையை போக்க சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏற்கனவே சரக்கு ரயில்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட பைபாசில் ரயில்வே தண்டவாளத்தில் தற்பொழுது புதிதாக இரட்டை ரயில் பாதை அமைக்கப்படுகிறது.  2 தண்டவாளங்கள் அமைத்து அங்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்து செல்லும் கொல்லம் - மதுரை, குருவாயூர் - சென்னை, கொல்லம் - சென்னை ரயில்கள் மேற்படி பைபாஸ் புதிய பிளாட்பாரத்திலே நிறுத்தி செல்லவும் திட்டமிடப்பட்டு ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் பணிகள்  அனைத்தும் 2022 இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒன்றிய அரசு புதிதாக அறிவித்துள்ள ரூ.12 ஆயிரம் கோடி மாஸ்டர் பிளான் திட்டத்தில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கும் ஒதுக்கப்படும் நிதியில் மேலும் பல மேம்பாட்டு பணிகள் நடக்க  உள்ளன. இது தொடர்பாக பட்டியல் ரயில்வே துறை தயாரித்து வருகிறது. ஏற்கனவே கன்னியாகுமரியை முனைய ரயில் நிலையமாக மாற்ற திட்டமிடப்பட்டது.  ஆனால் இட பிரச்னை காரணமாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை தரம் உயர்த்துவதற்கான பணிகள் நடைபெறும் என்கிறார்கள்.

Tags : Nagercoil Junction Railway Station , Master Plan, Renovated Nagercoil Junction, 4 lanes,
× RELATED ₹12 ஆயிரம் கோடி மாஸ்டர் பிளான்...