விளைச்சல் இருந்தும் வாங்க ஆளில்லை அடி மேல் அடி வாங்கும் ஏல வர்த்தகம்: அப்போது கொரோனா... இப்போது ஒமிக்ரான்

போடி: கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக ஏலக்காய் வர்த்தகம் அடிமேல் அடி வாங்கி வருகிறது. தற்போது விளைச்சல் இருந்தும் கொள்முதல் செய்ய ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஏல விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி, கேரளாவின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. இடுக்கி மாவட்டத்தின் பியல்ராவ், சுண்டல், தோண்டிமலை, தலக்குளம், கோரம்பாறை, பூப்பாறை, சாந்தம்பாறை, கானல்முகப்பு, சேரியார், உடும்பஞ்சோலை, கஜனாபாறை, ராஜாக்காடு, ராஜகுமாரி, அடிமாலி, நெடுங்கண்டம், சூரியநெல்லி, சின்னக்கானல், பெரியகானல், முட்டுக்காடு, தேவிகுளம், மூணாறு, ராஜமலை, வண்டிப்பெரியார், வண்டன்மேடு, கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடந்து வருகிறது. பெரும்பான்மையான ஏலத்தோட்டங்கள் தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக விவசாயிகளுக்கு சொந்தமானவை. ஏலத்தோட்டங்களில் தமிழக கூலித்தொழிலாளர்களே அதிகமாக வேலை செய்கின்றனர்.

*ஏக்கருக்கு ரூ.3 லட்சம் செலவு...

ஒரு ஏக்கரில் ஏல விவசாயம் செய்ய, ஏலச்செடிகளை நடவு செய்து கவாத்து எடுப்பு, களை எடுப்பு, உரம் மற்றும் மருந்தடிப்பு, 6 முறை அறுவடை என ஓராண்டுக்கு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சம் வரை செலவு செய்கின்றனர். ஏல விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் ஏலக்காய்களை இந்திய நறுமண வாரியம் (ஸ்பைசஸ் போர்டு) மூலம் ஏலம் விடுகின்றனர். இதற்காக விவசாயிகள் அந்த வாரியத்தில் உறுப்பினராகின்றனர். தேனி மாவட்டம், போடியிலும், இடுக்கி மாவட்டம் புத்தடியிலும் இந்திய நறுமண வாரியத்துக்கு அலுவலகங்கள் உள்ளன. இவை மூலம் ஆன்லைனில் ஏலக்காய்கள் ஏலம் விடப்படுகின்றன. வாரம் 6 நாட்கள் தொடர் ஏலம் நடக்கும். இதில், தமிழகம், கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு, ஏலக்காய்க்கு விலை நிர்ணயம் செய்கின்றனர். நறுமண வாரியம் மூலம் ஏலக்காய் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அவற்றை தொழிலாளர்கள் மூலம் தரம் பிரிக்கின்றனர். முதல் தரத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். பின்னர் வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். இதன் மூலம் 4 சதவீதம் ஜிஎஸ்டி கிடைப்பதுடன், பல கோடி அந்நியச் செலாவணி ஒன்றிய அரசுக்கு கிடைக்கிறது.

*கொரோனாவால் பாதிப்பு:

கடந்த 2019ல் சீனாவில் கொரோனா பரவல் தொடங்கி, உலகம் முழுவதும் லாக்டவுன் போடப்பட்டது. தமிழகம், கேரளாவில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பஸ் போக்குவரத்தின்றி தமிழக ஏலத்தோட்ட விவசாயிகளும், தொழிலாளர்களும் கேரளாவில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு செல்ல முடியாமல், ஏலக்காய் செடிகளை பராமரிக்காத நிலை ஏற்பட்டது. வெளிநாடுகளுக்கு ஏலக்காய்களை அனுப்ப முடியாமல் வெளிநாட்டு வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, ஏலத்தோட்ட விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பின் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, படிப்படியாக ஏல விவசாயம் சீரானது. உள்ளூர் வியாபாரமும், உலக வர்த்தகமும் கடந்த ஓராண்டாக படிப்படியாக சீரடைந்து வந்தது. ஏலக்காய் விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிப்பிலிருந்து மீண்டனர்.

*அச்சுறுத்தும் ஒமிக்ரான்...

கொரோனா பாதிப்பை தொடர்ந்து, ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலகை அச்சுறுத்துகிறது. வெளிநாடுகளில் தினசரி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் ஏலக்காய்க்கு தேவை இருந்தும், ஒமிக்ரான் தடையால் அனுப்ப முடியவில்லை. இதனால், உள்ளூரில் விலையும் குறைந்து வருகிறது. கடந்த 8 மாதமாக கிலோ ரூ.1,100, ரூ.1,400, ரூ.1,500 என ஏலக்காய் விலை உயர்ந்து வந்தது. மழையும், சீதோஷ்ண நிலையும் நன்றாக இருந்ததால், ஏலக்காய் தற்போது நல்ல விளைச்சல் கண்டுள்ளது. ஒமிக்ரான் பரவலை தொடர்ந்து, வடமாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநிலங்களுக்கும் அனுப்ப முடியவில்லை. இதனால், அறுவடை செய்த ஏலக்காய்களை ஸ்டோர் ரூமில் உலர வைக்கின்றனர். ஏலக்காய் நல்ல விளைச்சல் இருந்தும் கொள்முதல் செய்ய ஆளில்லை. விலையும் கிலோ ரூ.1,300, ரூ.900 என குறைந்து வருகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நிலையான விலை இல்லை

போடி ஏல வியாபாரி சங்கர் கூறுகையில், ‘‘3 ஆண்டுகளாக கொரோனாவால் உள்ளூர் மற்றும் உலக வர்த்தகம் பாதிக்கப்பட்டு ஏலக்காய்க்கு நிலையான விலை கிடைக்கவில்லை. அதிலிருந்து மீண்டு வந்து சூடுபிடிக்கும் நேரத்தில் ஒமிக்ரானால், உலக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்கிறார். ராசிங்காபுரம் ஏல விவசாயி செந்தில் கூறுகையில், ‘‘கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரமுடியாத நிலையில், ஒமிக்ரான் அச்சுறுத்தி வருகிறது. நன்றாக விளைந்து அறுவடை செய்த ஏலக்காய்களை இருப்பு வைத்து வருகிறோம். ஏக்கருக்கு ரூ.3 லட்சம் செலவழித்து நன்றாக விளைவித்து, அறுவடை செய்து வைத்துள்ள நிலையில், ஏலக்காயை கொள்முதல் செய்ய ஆளில்லை. இதனால், விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்தோம். அதை எப்படி கட்டப்போகிறோம் என தெரியவில்லை’’ என்கிறார்.

Related Stories: