×

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல: மோசமான வானிலைதான் காரணம் என முப்படைகளின் விசாரணை அறிக்கையில் தகவல்

டெல்லி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல, மோசமான வானிலைதான் காரணம் என முப்படைகளின் விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது. மேகத்திற்குள் நுழைந்ததால் தான் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதுதாக விசாரணை குழு அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் அருகே கடந்த மாதம் 8-ந்தேதி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.

இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானி வருண் சிங்கிற்கு பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கேப்டன் வருண் சிங் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படைகளின் விசாரணைக்குழு பல்வேறு தரவுகளை கொண்டு தீவிரமாக ஆய்வு செய்து வந்தது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பேட்டி தேடி கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.  இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து முப்படைகளின் விசாரணைக்குழு அறிக்கையின் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ஹெலிகாப்டர் விபத்திற்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ”குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் எனவும் எதிபாராத விதமாக ஏற்பட்ட திடீர் மேகக்கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால் தான் விபத்து நிகழ்ந்தது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Gunnur , Coonoor, helicopter crash, engine failure, bad weather, troop investigation report,
× RELATED மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு..!!