திருமண உதவி திட்டத்தில் 2,545 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

தாம்பரம், ஜன.14: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பாக, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 2,545 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி தொகையாக  ரூ.12.50 கோடி மற்றும் ரூ.9.66 கோடி மதிப்புள்ள 20.35 கிலோ கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, மேற்கு தாம்பரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமை வகித்தார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, 2,545 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகளை வழங்கி, பேசியதாவது:

தமிழக முதல்வரின் ஆணைப்படி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படுத்தப்படும் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்பு பயின்ற அச்சிறுப்பாக்கம் வட்டாரத்தை சேர்ந்த 53 நபர்களுக்கும், சித்தாமூர் வட்டாரத்தை சேர்ந்த 70 நபர்களுக்கும், காட்டாங்கொளத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 211 நபர்களுக்கும், லத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 59 நபர்களுக்கும், மதுராந்தகம் வட்டாரத்தை சேர்ந்த 137 நபர்களுக்கும், புனித தோமையார் மலை வட்டாரத்தை சேர்ந்த 470 நபர்களுக்கும், திருப்போரூர் வட்டாரத்தை சேர்ந்த 124 நபர்களுக்கும், திருக்கழுகுன்றம் வட்டாரத்தை சேர்ந்த 139 நபர்களுக்கும் என மொத்தம் 1,263 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பு முடித்துள்ள அச்சிறுப்பாக்கம் வட்டாரத்தை சேர்ந்த 117 நபர்களுக்கும், சித்தாமூர் வட்டாரத்தை சேர்ந்த 196 நபர்களுக்கும், காட்டாங்கொளத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 163 நபர்களுக்கும், லத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 119 நபர்களுக்கும், மதுராந்தகம் வட்டாரத்தை சேர்ந்த 165 நபர்களுக்கும், புனித தோமையார் மலை வட்டாரத்தை சேர்ந்த 196 நபர்களுக்கும், திருப்போரூர் வட்டாரத்தை சேர்ந்த 153 நபர்களுக்கும், திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் 173 நபர்களுக்கும் என மொத்தம் 1,282 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் என மொத்தம் 2,545 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: