திருச்சி சிறையில் இருந்து ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் வெளியில் வந்தார்

திருச்சி: மோசடி வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று ஜாமீனில் ெவளியில் வந்தார். ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3.10 கோடி மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு நான்கு வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் 2 பேர், தலா ரூ.50 ஆயிரம் பிணை தொகை செலுத்தி அவருக்கான ஜாமீன் பெற்றனர்.

அந்த ஜாமீன் உத்தரவை ராஜேந்திர பாலாஜியின் வக்கீல் இரவோடு இரவாக திருச்சி மத்திய சிறை அதிகாரியிடம் அளித்தார். இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் ரோல்கால் முடிந்ததும், காலை 7.20 மணிக்கு ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் வெளியில் வந்தார்.

அங்கு காத்திருந்த நிருபர்களை சந்திக்காமல் விறுவிறுவென நடந்து தயாராக நின்ற காரில், வக்கீல் மற்றும் கட்சியினருடன் ஏறி சிட்டாக பறந்தார். மன்னார்புரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் அங்கு குளித்து விட்டு காலை உணவு சாப்பிட்டுவிட்டு காலை 9.30 மணிக்கு மீண்டும் காரில் ஏறி சென்றுவிட்டார்.

Related Stories: