×

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு: நான்குமாட வீதியில் தங்க ரதம் பவனி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று  அதிகாலை 1.45 மணிக்கு அர்ச்சகர்கள் மார்கழி மாத திருப்பாவை பாசுரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வைகானச ஆகம முறைப்படி ஜீயர்கள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
ஏழுமலையான் கோயிலில் மூலவர் கருவறையை ஒட்டியுள்ள பகுதிக்கு தங்க கிணறு அருகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு உண்டியல் வைக்கப்பட்டுள்ள வழியாக வெளியே வரும் பாதையை சொர்க்கவாசலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த சொர்க்கவாசலை வைஷ்ணவ ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் திறந்து வைத்தனர்.

அதிகாலை 2 முதல் 4.30 மணி வரை நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, கர்நாடக மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி டி.தினேஷ் குமார், எம்.பி.க்கள் வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி, சி.எம்.ரமேஷ், மாதவ், பரத், அரசு கொறடா செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி,  நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா, தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள் இயக்குநர் மாருதி, திருமலை கிஷோர், தெலுங்கு மொழி வளர்ச்சி குழு தலைவர் லட்சுமி பார்வதி, துணை முதல்வர் நாராயண சுவாமி, ஆந்திர மாநில அமைச்சர்கள் ஆதிமுலப்பு சுரேஷ், அப்பல் ராஜூ, வெல்லம் பள்ளி ஸ்ரீனிவாஸ், கவுதம் ரெட்டி ஜெயராம், அனில்குமார் யாதவ், அவந்தி ஸ்ரீனிவாஸ் பாலினேனி ஸ்ரீனிவாஸ், வேணுகோபால கிருஷ்ணா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய பக்தர்கள் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ₹300 சிறப்பு நுழைவு தரிசனம், கல்யாண உற்சவம் ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள்,  இலவச தரிசனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த வந்த பக்தர்கள் என  தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி 32 அடி உயரமுள்ள தங்கரதத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய தேவஸ்தான பெண் ஊழியர்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்க 4 மாட வீதிகளில் பக்தர்களின் ‘‘கோவிந்தா, கோவிந்தா’’ என்ற பக்தி முழக்கத்துக்கு மத்தியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

22ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இன்று வைகுண்ட துவாதசியையொட்டி காலை  5 மணி முதல் 6 மணிக்கு இடையே ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் நடைபெற உள்ளது.

Tags : Gate of Heaven Opening ,Tirupati ,Vaikunda Ekadasi: ,Nankumada Road , Gate of Heaven Opening at Tirupati on the occasion of Vaikunda Ekadasi: Golden Chariot Bhavani on Four Roads
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...