பல்லடத்தில் போராட்டத்தின் போது தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய வழக்கில் பல்லடம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் ராஜ்குமார் கைது

திருப்பூர்: தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய வழக்கில் பல்லடம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அக்கட்சியின் இளைஞரணி நிர்வாகி ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு தாராபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (58). இவர், பல்லடம் பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டியில்  பழங்கள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக மேம்பாலத்தின் மீது 20 நிமிடம் காத்திருந்து பிறகு பயணத்தை ரத்து செய்தார். இதைக்கண்டிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக, நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே பாஜ சார்பில் மனிதசங்கலி  போராட்டம் நடந்தது. இப்போராட்டம் நடந்தபோது சாலையோர தள்ளுவண்டி வியாபாரி முத்துச்சாமி, பிரதமர் மோடியை பற்றி விமர்சித்ததாக கூறி பாஜவினர் வாக்குவாதம் செய்து அவரை தாக்கவும் முயன்றனர். உயிருக்கு பயந்து அவர், அருகில் இருந்த செல்போன் கடைக்குள் ஓடி தப்பினார்.

இருப்பினும், கடைக்குள் புகுந்த பாஜவினர் முத்துச்சாமியை சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவர் கடைக்குள் மயங்கி விழுந்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட பாஜவினரை தடுத்து, அவர்களையும், தாக்கப்பட்டவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட  விசாரணையின்போது, போராட்டம் முடிந்த பிறகும் கூட்டம் கூடி நின்றதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் கலைந்து செல்லுமாறும் கூறியதற்காக என்னை தாக்கினார்கள். பிரதமர் மோடி குறித்து அவதூறாக எதுவும் கூறவில்லை என வியாபாரி  தெரிவித்தார். இதனை தொடர்ந்து பல்லடம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் ராஜ்குமார், திருப்பூர் மாவட்ட இளைஞரணி நிர்வாகி ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: