×

ஆரோக்கியமான உணவு கொடுக்கிறோம் என்ற திருப்தி இருக்கு!

நன்றி குங்குமம் தோழி

பட்டினப்பாக்கம் கடற்கரை சாலை. அந்த உப்புக் காற்றோடு நம் நாசியை தூண்டுகிறது ‘மீனாட்சி மெஸ்’ உணவகம். பல வகையான கடல் உணவு விருந்து என்று உணவகத்தின் வாசலில் வைக்கப்பட்டு இருந்த அந்த போர்ட்டில் எழுதி இருந்தது. உள்ளே சென்றதும் தலை வாழை இலையில் சுடச் சுடச் சாப்பாடு, மீன் குழம்பு, இறால் மசால், பல வகையான மீன் வறுவல் என வந்தவர்களுக்கு விருந்து படைத்துக் கொண்டு இருந்தனர் ராமு மற்றும் மகாலட்சுமி தம்பதியினர்.

‘‘என் அம்மாவின் பெயர் மீனாட்சி. அவங்களின் நினைவாகத் தான் கடைக்கு அவங்க பெயர் வைத்திருக்கேன்’’ என்று பேச துவங்கினார் ராமு. அடிப்படையில் நாங்க மீனவ குடும்பத்தை சேர்ந்தவங்க. என் அக்கா மகளை தான் நான் கல்யாணம் செய்து கொண்டேன். அப்பா கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவார். அம்மா அதை விற்பனை செய்வாங்க. அதில் வந்த வருமானத்தைக் கொண்டு தான் எங்க குடும்பம் நகர்ந்தது. நான் எட்டாவது வரை தான் படிச்சிருக்கேன். அதற்கு மேல் படிக்க வைக்கல. அக்காவுக்கு திருமணமான பிறகு நானும், மாமாவும் அப்பாவுடன் சேர்ந்து கடலுக்கு மீன் பிடிக்க போக ஆரம்பித்தோம்.

எங்களுக்கு சொந்தமா படகு இருக்கு. கடலுக்கு போகும் போது செடிகள் எல்லாம் கட்டி எடுத்துக் கொண்டு போவோம். காரணம் மீன்கள் வெயில் நேரத்தில் ஆழ்கடலுக்குள் சென்றுவிடும். வலையின் நீளம் 200 மீட்டர் தான். ஆனால் மீன்கள் 1000 மீட்டர் ஆழ்கடலுக்குள் சென்றுவிடும். அந்த சமயத்தில் வலை அவ்வளவு தூரம் போகாது. செடிகளை கடலில் போடும் போது நிழல் என நினைத்து வெளியே வரும். அப்போது வலை வீசி பிடிப்போம். அதுவே இரவு நேரம் என்றால் மீன்கள் மேலே தான் இருக்கும். சுறா வரை பெரிய மீன்கள் எல்லாம் பார்த்து இருக்கோம். அதனை தூண்டில் போட்டு தான் பிடிக்கணும். வலையில் பிடிக்க முடியாது. அப்படியே தூண்டிலில் மாட்டினாலும் உடனே மேலே தூக்கினால் படகை கவிழ்த்திடும்.

அதனால் அதை அப்படியே அலையவிட்டு அது டயர்ட் ஆனதும் தான் மேலே தூக்குவோம். கடலுக்கு போகும் போது நம்முடைய உடல் திடகாத்திரமா இருக்கணும். இல்லை என்றால் திரும்பி வருவது கஷ்டம். ஆனால் இப்போது எல்லா மீனவருக்கும் ஜி.பி.எஸ் கொடுத்து இருக்காங்க. அதனால நாங்க இருக்கும் இடத்தில் இருந்து கரைக்கு சிக்னல் கொடுத்தா போதும். மீட்புப் படை எங்களை தேடி வந்திடும்’’ என்றவர் பல வேலைகள் செய்துள்ளார். அதன் பிறகு மனைவி மகாலட்சுமியின் ஆலோசனை பேரில் இந்த உணவகத்தை  துவங்கியுள்ளார். ‘‘என் மாமாவுக்கு ரொம்ப இளகின மனசு. காசில்லை பசின்னு யார் வந்தாலும், இலவசமா அவங்களுக்கு சாப்பாடு கொடுத்திடுவார். அந்த ஒரு நல்ல குணத்துக்காகவே என் மாமாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார். கடல்ல பெரிய அளவில் வியாபாரம் இல்லை. ஒரு நாள் கிடைக்கும், சில நாள் கிடைக்காது.

ஆரம்பத்தில் 150 ரூபாய்க்கு ஒரு டி.வி நிறுவனத்தில் வேலைப் பார்த்தார். அதன் பிறகு ஆட்டோ ஓட்டினார். சைக்கிள் நிறுவனத்திற்கு லோட் அடிக்கும் வேலையும் செய்து வந்தார். அதன் பிறகு டிராவல்சில் கார் ஒன்றை எடுத்து  ஓட்டினார். இதற்குள் எங்களுக்கு திருமணமும் ஆயிடுச்சு. இப்படியே ஒவ்வொரு வேலையா பார்த்துக் கொண்டு இருந்தா எப்படி? நிரந்தரமா ஒரு வேலை வேண்டும்ன்னு மாமாவிடம் நான் சொல்ல, அப்படித்தான் தள்ளுவண்டியில் சாப்பாட்டு கடை ஒன்று போட்டார். காலை, மதியம், இரவுன்னு மூன்று நேரமும் கடையை ஆரம்பிச்சோம். காலை டிபன், மதியம் அசைவ சாப்பாடு, இரவு பரோட்டான்னு சில காலம் அந்த கடையை நடத்தி வந்தோம். பசங்க எல்லாரும் அப்ப சின்னவங்க என்பதால் என்னால் கடையில் வேலைப் பார்க்க முடியல.

மேலும் மாமாவுக்கு என்னை ரோட்டில் அப்படி நிற்க வைக்கவும் விருப்பமில்லை. அதனால் நான் வீட்டில் இருந்து தயார் செய்து கொடுப்பேன். மாமாவும் கடையில் நான்கு பேர் வேலைக்கு வச்சிருந்தார். இதற்கிடையில் பசங்களும் பெரிசாயிட்டாங்க. இப்ப கடை இருக்கிற இடத்தில் தான் நாங்க வசித்து வந்தோம். அங்க இருந்து வேறு வீட்டுக்கு லீசுக்கு போயிட்டோம். இந்த வீட்டை சும்மா பூட்டி வைக்காமல், இங்கேயே ஒரு உணவகத்தை ஆரம்பிக்கலாம்னு முடிவு செய்தோம்’’ என்றவர் முழுக்க முழுக்க மீன் உணவாக கொடுக்கலாம்னு முடிவு செய்துள்ளார். ‘‘பாய்லர் கோழி, ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்கிறாங்க. மட்டன் சாப்பிட்டா இருதய பிரச்னை ஏற்படும்.

ஆனால் கடலில் இயற்கை முறையில் வளரும் மீனை சாப்பிடுவதால் எந்த உடல் உபாதைகளும் ஏற்படாது. மேலும் மீனுடன் சின்ன வயசில் இருந்தே பழகியதால், சொந்தமா படகும் இருப்பதால், தரமாக கொடுக்க முடியும். என்னுடைய வீட்டை உணவகமா மாற்றி அமைச்சேன்’’ என்று பேச துவங்கினார் ராமு.
‘‘மீனைப் பொறுத்தவரை ஃப்ரெஷ்ஷா இருந்தாதான் சாப்பிட முடியும். கெட்டு போய்விட்டால், ஒரு வித வாடை வரும் சாப்பிடவோ, சமைக்கவோ முடியாது. அந்த மீன் எவ்வளவு விலை அதிகமா இருந்தாலும் தூக்கி போட்டுடுவோம். காலை இரண்டு மணிக்கு லோட் வரும். நான் உடனே கடற்கரைக்கு வந்து உணவகத்திற்கு தேவையான மீன், நண்டு, இறால் என எல்லாவற்றையும் வாங்கி வந்திடுவேன். அதை பிரித்து சுத்தம் செய்ய கொடுப்பேன்.

அதற்காக தனி ஆட்கள் இருக்காங்க. அன் பிறகு ஒன்பது மணிக்கு எல்லாம் மதிய உணவிற்கான வேலை ஆரம்பிச்சிடும். மீன் இறால் எல்லாவற்றையும் நன்றாக கழுவி அதனை மிளகாய் தூள் மசாலாக்கள் சேர்த்து பிரட்டி வச்சிடுவேன். 11 மணி எல்லாம் தயாரா இருக்கும். மீனைப் பொறுத்தவரை அன்று என்ன மீன் கிடைக்கிறதோ அதை சமைப்போம். நாங்க எதையுமே ஸ்டாக் எடுத்து வைப்பதில்லை. எல்லாமே அன்று வாங்கி சமைப்பது தான்’’ என்றவர் வேலையாட்கள் வராத நாட்களில் தானே சமைத்திடுவாராம். ‘‘இப்ப கடலில் மீன் பிடிக்க சென்றாலும் பெரிய அளவில் வருமானம் இல்லை. அப்படி செல்லும் மீனவர்களின் வீட்டு பெண்கள் தான் எங்க கடையில் வேலைப் பார்க்கிறார்கள்.

அவர்களுக்கு என் மூலமாக மாதம் ஒரு வருமானம் கிடைக்கும் போது, மனசுக்கு நிறைவா இருக்கு. மேலும் சாப்பாடு என்று நாம் வழங்கும் போது, அது மிகவும் தரமானதாகவும், நியாயமான விலையில் கொடுக்க வேண்டும்’’ என்றவரை தொடர்ந்தார் மகாலட்சுமி. ‘‘சமைக்க ஆட்கள் இருந்தாலும் மீனுக்கு மசாலா தடவுவது முதல் மீன் குழம்பு எல்லாம் என் கண் பார்வையில் தான் நடைபெறும். அது மட்டும் இல்லை இதற்கான மசாலாவை நான் வீட்டில் தயார் செய்து விடுவேன். நம் வீட்டில் அரைக்கும் மசாலாவை தான் இங்கும் பயன்படுத்துறேன். அதே போல் சாப்பாட்டில் சோடாமாவு, அஜினோமோட்டா எதுவும் சேர்க்க மாட்டோம். மீனின் வருகையை பொருத்து அன்று குழம்பு, வருவல் எல்லாம் மாறுபடும், சில சமயம் மத்தி மீன் கிடைக்கும். சில சமயம் சங்கரா மீன்... அதே போல் மீனில் அளவைப் பொருத்து விலையும் மாறுபடும். ஆனால் ஒரு முழு மீன் உணவு சாப்பாட்டின் விலை ரூ.60தான்.

நாங்க எந்த விளம்பரமும் செய்யவில்லை. ஆரம்பித்த போது ஐந்து பேர் வந்தாங்க. இப்ப குறைந்தபட்சம் 300 பேர் சாப்பிட வராங்க. நிறைய பேர் பார்சல் கேட்கிறாங்க. மயிலாப்பூர் வரை நாங்களே டெலிவரியும் செய்கிறோம். சிலர் வீட்டில் விருந்தாளி வந்தால் பல்க் ஆர்டர் கொடுப்பாங்க. அப்படியும் சமைத்து தருகிறோம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து வகையான மீன்கள் இருக்கும். அதில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சமைத்து தருகிறோம். மதிய உணவு மட்டும் தான். இரவு சாப்பாடு ஆர்டரின் பேரில் தான் வழங்குகிறோம். எங்க இரண்டு பசங்களையும் நல்லா படிக்க வச்சிட்டோம். எங்களுக்கு பெரிய அளவில் எல்லாம் ஆசை இல்லை. என் பசங்க நல்ல நிலைக்கு வந்தால் போதும்.

மேலும் இதில் வரும் வருமானமே எங்களுக்கு போதும். அதிகமாக நாங்க ஆசைப்படுவதும் இல்லை. எங்க உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கிறது. சந்தோஷமா இருக்கிறோம். என் கணவர் வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டார். இப்போது தான் நிம்மதியா இருக்கார். எல்லாவற்றையும் விட ஆரோக்கியமான உணவு வழங்கி வருகிறோம் என்ற திருப்தி எங்களுக்கு இருக்கு. அது போதும்’’ என்று அவர்கள் சொல்லும் போது மனசு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்பட்டது.

தொகுப்பு: ப்ரியா

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!