×

போராட்டத்தால் வியாபாரம் பாதிப்பு என கூறியதால் தள்ளுவண்டி வியாபாரி மீது பாஜவினர் தாக்குதல்: பல்லடத்தில் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (58). இவர், பல்லடம் பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டியில்  பழங்கள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக மேம்பாலத்தின் மீது 20 நிமிடம் காத்திருந்து பிறகு பயணத்தை ரத்து செய்தார். இதைக்கண்டிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக, நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே பாஜ சார்பில் மனிதசங்கலி  போராட்டம் நடந்தது. இப்போராட்டம் நடந்தபோது சாலையோர தள்ளுவண்டி வியாபாரி முத்துச்சாமி, பிரதமர் மோடியை பற்றி விமர்சித்ததாக கூறி பாஜவினர் வாக்குவாதம் செய்து அவரை தாக்கவும் முயன்றனர். உயிருக்கு பயந்து அவர், அருகில் இருந்த செல்போன் கடைக்குள் ஓடி தப்பினார்.

இருப்பினும், கடைக்குள் புகுந்த பாஜவினர் முத்துச்சாமியை சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவர் கடைக்குள் மயங்கி விழுந்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட பாஜவினரை தடுத்து, அவர்களையும், தாக்கப்பட்டவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட  விசாரணையின்போது, போராட்டம் முடிந்த பிறகும் கூட்டம் கூடி நின்றதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் கலைந்து செல்லுமாறும் கூறியதற்காக என்னை தாக்கினார்கள். பிரதமர் மோடி குறித்து அவதூறாக எதுவும் கூறவில்லை என வியாபாரி  தெரிவித்தார். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Pajavinar , BJP attacks trolley dealer on protest
× RELATED கேரளாவில் பாஜவினர் கொலைக்கு முதல்வர்...