ஒரே நாளில் 4 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்: பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பழநி: பழநி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இன்று முதல் 5 நாட்களுக்கு சுவாமி தரிசனத்துக்கு அனுமதியில்லை என்பதால் பழநியில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.  முன்னதாக சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகங்களை நடத்தினர்.

இதை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க வேல், மயில், சேவல், வளர்பிறை நிலவு, சூரியன் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள்நிற கொடி பழநி பெரியநாயகி அம்மன் கோயில்  கொடிமரத்தில் ஏற்பட்டது. தொடர்ந்து வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 17ம் தேதி மாலை நடைபெறுகிறது. அன்றைய தினம் வெள்ளித்தேர் உற்சவங்களுக்கு பதிலாக வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 18ம் தேதி சிறிய மரத்தேரில் கோயில் வளாகத்திற்குள்ளேயே தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும். கோயில் வலைத்தளம் மற்றும் யூ-டியூப் சேனல்கள் மூலம் நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கொரோனா பரவல் காரணமாக கோயில்களில் இன்று முதல் 18ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: