திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பணிக்கு போலி அனுபவ சான்று கொடுத்து சேர்ந்த உதவி பேராசிரியர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(50). இவர் கடந்த 2010 முதல் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணியில் சேரும்போது அனுபவ சான்றிதழ் பல்கலைக்கழகம் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து பன்னீர்செல்வம் 1999 முதல் 2004 வரை பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பணி புரிந்ததாகவும், தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2004 முதல் 2006 வரை பணி புரிந்ததாகவும் இரண்டு அனுபவ சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

இவை போலியாக இருக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க பதிவாளர் சையது ஷபி கடந்த 2014ல் உத்தரவிட்டுள்ளார். ஆனால் உதவி பேராசிரியர் பன்னீர்செல்வம் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து அவர் சமர்ப்பித்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியாக அவரே தயார் செய்தது என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கடந்த 2019ல் பல்கலைக்கழக நிர்வாகம் பன்னீர்செல்வத்தை சஸ்பெண்ட் செய்தது.

இதன் தொடர்ச்சியாக பதிவாளர் சையதுஷபி புகாரின்படி வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த செப்டம்பர் 2ம் தேதி  வழக்குப்பதிவு செய்தனர். இதைதொடர்ந்து உதவிப்பேராசிரியர் பன்னீர்செல்வம் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தலைமறைவான அவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் காட்பாடியில் உள்ள வீட்டில் பன்னீர்செல்வத்தை நேற்று போலீசார் கைது செய்து காட்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: