ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்யுங்கள்: மாநிலங்களுக்கு சுகாதார துறை செயலர் கடிதம்

புதுடெல்லி: கொரோனா தொற்று நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில் போதுமான அளவு மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யும்படி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான அளவு மருத்துவ ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்யுங்கள். குறைந்தபட்சம் 48 மணி நேரத்துக்கு போதுமான அளவு மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பு வைத்திருக்க வேண்டும். நாடு முழுவதும் ஆக்சிஜன் ஆலைகள் வலுப்படுத்த வேண்டும். அவை முழுவதுமாக செயல்படுவதற்கான நடவடிக்கைகள்  மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் போதுமான எண்ணிக்கையில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளதையும் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் உயிர்காக்கும் உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்வதோடு, தனியார் சுகாதார அமைப்புக்களுடன் போதுமான ஒருங்கிணைப்பும் தேவையாகும். ஆக்சிஜன் தொடர்பான பிரச்னைகள்  மற்றும் சவால்களை உடனுக்குடன் தீர்த்துவைப்பதற்கு ஏதுவாக ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: