கச்சா எண்ணெய் உயர்ந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலையில் 68 நாட்களாக மாற்றமில்லை: 5 மாநில தேர்தலே காரணம்?

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள போதிலும், கடந்த 68 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றை பொருத்து, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த 2020ல் கொரோனா காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்த போது அதன் பலன் மக்களுக்கு கிடைக்காமல், கலால் வரியை ஒன்றிய அரசு உயர்த்தியது.  இதனால், பெட்ரோல், டீசல் இரண்டுமே லிட்டருக்கு ரூ.100க்கு மேல் சென்றன.

இது ஒன்றிய அரசின் மீது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை சமாளிக்க தீபாவளி பரிசாக கடந்த நவம்பர் 4ம் தேதி பெட்ரோல் மீது ரூ.5, டீசல் மீது ரூ.10 கலால் வரி குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து பல மாநில அரசுகள் வாட் வரியையும் குறைத்தன. இந்நிலையில், கடந்த நவம்பர் 4ம் தேதி நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40க்கும் டீசல் விலை ரூ.91.43க்கும் விற்பனை ஆகின. நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 68 நாட்களுக்கு இந்த விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது.இதற்கு முன்,  கடந்த 2020 மார்ச் 17 முதல் ஜூன் 6ம் தேதி வரை 82 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 84 டாலரை எட்டி உள்ளது. இருப்பினும், 68 நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. இதற்கு உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. மார்ச் 10ம் தேதி இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதுவரையில், விலையில் பெரிய அளவில் ஏற்றங்கள் இருக்காது என தெரிகிறது.

Related Stories: