×

2 நாளில் இரு அமைச்சர்கள் ராஜினாமா: அடுத்தடுத்து திருப்பங்களால் உபி.யில் பரபரப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டமாக சட்டசபை  தேர்தல் நடக்கிறது.பாஜ,சமாஜ்வாடி,பகுஜன் சமாஜ், காங்கிரஸ்  ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டாலும் பாஜ, சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே முக்கிய போட்டி நிலவுகிறது.தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் பாஜ அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த  சுவாமி பிரசாத் மவுர்யா நேற்றுமுன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து அக்கட்சியை சேர்ந்த அவரின் ஆதரவு  எம்எல்ஏக்கள்  5 பேரும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மவுர்யாவும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அகிலேஷின் சமாஜ்வாடியில் நாளை சேருவார்கள் என தெரிகிறது.

இந்நிலையில் தாரா சிங் சவுகான் என்ற அமைச்சர் நேற்று ராஜினாமா செய்தார்.  அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தில்,‘யோகி ஆதித்யநாத் அரசு பிற்பட்டோர், தலித், நலிவடைந்த பிரிவினர்,விவசாயிகள் மற்றும் வேலை இல்லாத இளைஞர்களை முழுமையாக புறக்கணித்துள்ளது.இதனால் ராஜினாமா செய்தேன்’ என குறிப்பிட்டுள்ளார். 2 நாட்களில் 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்தது பாஜவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

காங்கிரஸ் எம்எல்ஏ நரேஷ் சைனி,சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ஹரிஓம் யாதவ்,முன்னாள் எம்எல்ஏ தரம்பால் சிங் ஆகியோர்  பாஜ தலைவர்கள் முன்னிலையில் நேற்று அக்கட்சியில்  சேர்ந்தனர். இதற்கிடையே, முதல் மற்றும் 2ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாடி  வேட்பாளர்களின் பட்டியல் 2 நாளில் அறிவிக்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

பிரசாத் மவுர்யா மீது வழக்கு : கடந்த 2014ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிய பிரசாத் மவுர்யா, ‘திருமணங்களின்போது, கவுரி பூஜை, வினாயகர் பூஜைகளை செய்யக்கூடாது என்றும் தலித்,பிற்பட்டோர்களை அடிமைப்படுத்துவதற்காகவும் திசைதிருப்பவும் உயர் ஜாதியினர் போட்ட சதி திட்டம் இது ’ என்று தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட பிரிவினர் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில்  பேசியதாக அவர் மீது சுல்தான்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.  அவர் பாஜவில் இருந்து விலகியுள்ள நிலையில் 7 ஆண்டுக்கு பின் இப்போது அவருக்கு எதிராக   கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் யோகி?: இதற்கிடையே,சட்டசபை தேர்தலில் அயோத்தி தொகுதியில் முதல்வர் ஆதித்யநாத் போட்டியிட உள்ளதாகவும் பாஜவின் உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் இதுபற்றி பேசப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : UP , Two ministers resign in 2 days: Tensions in UP
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை