தனியார் மருத்துவமனையில் வாலிபர் மர்மச்சாவு: உறவினர்கள் முற்றுகை போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரம் அடுத்த இந்து பைரவா காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (22). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கி,  காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்தபோது, தலையில் நீர்கட்டி இருப்பது தெரிந்தது. 3 மாதம் கழித்து ஆபரேஷன் செய்து கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 5ம் தேதி கிருஷ்ணமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

அப்போது,  அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதால், ஆபரேஷனை பாதியிலேயே நிறுத்திய மருத்துவர்கள், அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். தொடர்ந்து 2 நாட்களாக அறுவை சிகிச்சை பிரிவில் உறவினர்களை அனுமதிக்காததால், நேற்று உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கிருஷ்ணமூர்த்தி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, முறையான பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும், கிருஷ்ணமூர்த்தி இறந்ததற்கான காரணத்தையும் கூறவில்லை என கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து மறைமலைநகர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. கிருஷ்ணமூர்த்தியின் மர்மச்சாவுக்கு காரணம் தெரியும்வரை சடலத்தை பெற மாட்டோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில்

ஈடுபட்டனர்.

Related Stories: