×

அமெரிக்காவில் முதல் முறையாக கறுப்பின பெண்ணின் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு: வலிகளை சுமந்து இனவெறி எதிர்த்தவர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிசோரியில் கடந்த 1928ம் ஆண்டில் பிறந்தவர் மாயா ஏஞ்சலோ. கறுப்பினத்தை சேர்ந்த இவர் பல்துறை வித்தகர். ஆனால், இவரது சாதனைகள் அவ்வளவு எளிதில் படைக்கப்பட்டவை அல்ல. இவரது சாதனைக்கு பின்னால் பல வலிகளும் வேதனைகளும் உள்ளன.
 சிறுவயதிலேயே இனவெறி தாக்குதலுக்கு ஆளானவர். தனது 7 வயதிலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர். பல வன்கொடுமைகளையும் அனுபவித்தவர். அதிலிருந்து மீண்டு, பல வலிகளை தந்த இந்த சமூகத்தில் இருந்து பல பாடங்களை கற்றுக் கொண்டார். இனவெறிக்கு எதிராக, கறுப்பின பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

பல்வேறு கவிதை, கட்டுரை, புத்தகங்களை எழுதினார். இவர் எழுதிய ‘கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என எனக்கு தெரியும்’ என்ற சுயசரிதை புத்தகம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. தன் வாழ்க்கையின் மூலம் இனவெறியின் கொடுமைகளை மாயா தோலுரித்துக் காட்டினார்.
இதற்காக, 2010ம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய மக்கள் விருதான, ‘ஜனாதிபதி விருது’ மாயாவுக்கு கிடைத்தது. 2014ம் ஆண்டில் தனது 86வது வயதில் அவர் காலமானார். இந்நிலையில், மாயா ஏஞ்சலோவின் சேவையை பாராட்டி அவரது உருவம் பொறித்த 25 சென்ட் நாணயத்தை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் கறுப்பின பெண்ணின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

Tags : United States , Issue of the first black woman engraved coin in the United States: Anti-racist carrying pains
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்