×

இபிஎஸ் அறிக்கைக்கு பதிலடி ஸ்டிக்கர் கலாச்சாரத்தை துவக்கி வைத்ததே அதிமுக ஆட்சிதான்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: ஸ்டிக்கர் கலாச்சாரத்தை துவக்கி வைத்ததே அதிமுக ஆட்சிதான் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை தொடர்பாக, நேற்று  தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு, அதிமுக அரசின் திட்டங்களுக்கு, திமுக அரசு தன்னுடைய ஸ்டிக்கர்களை ஒட்டுகிறது என்று ஒரு குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார். நான் கேட்க விரும்புவது, தமிழ்நாட்டிலே இப்படி ஒரு ஸ்டிக்கர் ஒட்டும் கலாச்சாரத்தை துவக்கி வைத்ததே அதிமுக ஆட்சிதான். 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கி, கலைஞர் பெயரை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஆரம்பித்து,  திருவள்ளுவர் படத்தையே ஸ்டிக்கர் போட்டு மறைத்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி.

இன்றைக்கு நம்முடைய முதல்வர் ஆட்சியில், பொங்கல் பையாக இருந்தாலும், எந்தப் பரிசாக இருந்தாலும், அதில் முதலமைச்சருடைய ஒரு படம்கூட இல்லாத ஒரு நல்ல சூழ்நிலை உருவாக்கியிருக்கக்கூடிய ஆட்சி, திமுக ஆட்சி.  ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 2008ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கலைஞரால் கொண்டு வந்த மிகப்பெரிய, மகத்தான திட்டம். ரூ.1928 கோடி  செலவில் அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்தத் திட்டத்தைத் தன்னுடைய நேரடி கண்காணிப்பில் இருந்து, 95% பணிகளை நிறைவேற்றிவிட்டு, ஆட்சிப்பொறுப்பிலிருந்து நாங்கள் விலகிய பிறகு, 2013ம் ஆண்டில், 5% பணியை மட்டும் அவர்கள் பார்த்து, குழாயில் தண்ணீரை மட்டும் அவர்கள் திறந்துவைத்து விட்டு, அதில், இதை ஏதோ அதிமுக செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டார்கள்.

கோயம்பேடு பேருந்து நிலையம், கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது உருவாக்கப்பட்டது. அதிமுக ஆட்சி வந்தவுடன் அதைத் திறந்து வைத்து, தங்கள் பெயரை ஸ்டிக்கரில் போட்டுவிட்டு, கலைஞருடைய கல்வெட்டை எடுத்துவிட்டு, ஏதோ அதிமுக ஆட்சிதான் அதை உருவாக்கியதைப்போல நாடகம் ஆடினார்கள். புதிய தலைமைச் செயலகக் கட்டடம், கலைஞர்  உருவாக்கிய கட்டடம். அதில் ஓமந்தூரார் மருத்துவமனை என்று போட்டு, ஏதோ பெரிய மருத்துவமனையை தாங்கள்தான் அங்கே உருவாக்கியதைப்போல ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது அதிமுக ஆட்சி. இன்றைக்கு மருத்துவமனைகளைப் பற்றி, முன்னாள் முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.

2011ம் ஆண்டில் நமது முதல்வர், அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டில் 10 அரசு கலைக்கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களின் சார்பாக உறுப்புக் கல்லூரிகளாக அன்றைக்கு அறிவித்தார். அந்த 10 அரசுக் கல்லூரிகளிலும் 2011ம் ஆண்டில், அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கி, எல்லா பணிகளையும் முடித்து வைத்தார். ஆனால், அவர்கள் 2011ல் ஆட்சிக்கு வந்தவுடன், அந்த 10 கல்லூரிகளும், ஏதோ அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது போல தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர்.

இப்போது இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்றைக்கு அமைச்சராக அங்கே அமர்ந்துகொண்டுதானே அதை பார்த்துக் கொண்டிருந்தார். எனவே, ஸ்டிக்கர் ஒட்டக்கூடிய இந்த கலாச்சாரம் என்பது, உங்கள் ஆட்சியில் உங்களாலே உருவாக்கப்பட்டது. இன்றைக்கு திறக்க இருக்கக்கூடிய விருதுநகர் மருத்துவக் கல்லூரியும், 2011ம் ஆண்டு கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிதான். எனவே, நீங்கள் பெற்ற பிள்ளைகளை நீங்கள் பேணிப் பாதுகாத்திருக்க வேண்டும். நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தீர்களே ஒழிய, சோறு வைத்தீர்களா என்றுதான் நான் கேட்க விரும்புகிறேன் என்றார்.

Tags : EPS ,Gold South Nadu , AIADMK regime launches sticker culture in response to EPS report: Minister Thangam
× RELATED தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளின்...