×

அரசு ஊழியர்களுக்கு வழங்கியதுபோல் கோயில் பணியாளருக்கு அகவிலைப்படி பொங்கல் கருணைக்கொடை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசை கலைஞர்கள் முதலானவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.1,000த்தை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது. கிராம கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.3,000த்தை ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது. திருக்கோயிலில் பக்தர்கள் மொட்டை போடும்பணியை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று, தற்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் வரப்பெறும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு 01.01.2022 முதல் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதம் உயர்வு செய்து, 31 சதவீதமாக நிர்ணயம் செய்து வழங்க உத்தரவிடப்படுகிறது. இதன்படி அர்ச்சகர்கள் மற்றும் சீட்டு விற்பனையாளர்களுக்கு ரூ.2500, காவல் பணியாளர்களுக்கு ரூ.2200, துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.1400 மாதச்சம்பளம் உயரும்.

இதன்மூலம் சுமார் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால் ஆண்டொன்றுக்கு ரூ.25 கோடி கூடுதல் செலவு ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவதுபோல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும். ரூ.1000 ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடை இந்த ஆண்டில் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு ரூ.1.5 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin , Pongal donation to temple employees as given to government employees: Chief Minister MK Stalin's order
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...