மதுரவாயலில் பைக் நிலைதடுமாறி சரிந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி 2 குழந்தைகள் நசுங்கி சாவு: தந்தை கண் முன் சோகம்

சென்னை: மதுரவாயலில் பைக் நிலைதடுமாறி சாலையில் விழுந்த போது பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தந்தை கண் முன்னே நடந்த இந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவடியை சேர்ந்தவர் செல்வம் (36), டிரைவர். இவரது மனைவி சுமலதா (29). இவர்களது குழந்தைகள் ஆதிரன் (4), கவுசிக் (2) மற்றும் ஒரு கைக்குழந்தை உள்ளது. நேற்று மாலை இவர்களது உறவினர்கள் சபரிமலைக்கு செல்ல இருந்ததால் மகாலிங்கபுரத்தில் உள்ள அய்யப்பன் கோயிலுக்கு செல்வம் குடும்பத்துடன் சென்றார். அவர்களை வழியனுப்பி விட்டு பைக்கில் அனைவரும் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

வீட்டிற்கு செல்ல அனைவருக்கும் கார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் செல்வம் பைக்கில் வருவதாகவும், குழந்தைகளுடன் மனைவியை காரில் வருமாறும் கூறியுள்ளார். ஆனால் ஆதிரன், கவுசிக் இருவரும் தந்தையுடன் பைக்கில் வருவதாக அடம்பிடித்துள்ளனர். இதையடுத்து மனைவி மற்றும் கைக்குழந்தையை காரில் அனுப்பிவிட்டு 2 குழந்தைகளுடன் செல்வம் பைக்கில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த 3 சக்கர சைக்கிள் மீது பைக் உரசியதில் தடுமாறி பைக்கில் சென்ற செல்வம் குழந்தைகளுடன் சாலையில் விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் ஆதிரன், கவுசிக் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் செல்வம் பலத்த காயமடைந்தார். தன் கண் முன்னே 2 குழந்தைகள் பலியானதைக் கண்டு செல்வம் கதறி அழுதார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குழந்தைகளின் தாய் சுமலதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவரை கண்கலங்க செய்தது. தகவலறிந்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், லாரி ஓட்டுநர் மற்றும் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: