சிப்காட் தொழிற்பேட்டைக்காக வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்த கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சிப்காட் தொழிற்பேட்டைக்காக வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கிராமப்பகுதிகளில் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் பெருகுவதற்கான சிறந்த வழிகளில் சிப்காட் தொழிற்பேட்டைகளும் ஒன்று என்பதில் பாமக உறுதியாக உள்ளது. பல மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பேட்டைகளை அமைக்க வலியுறுத்தி போராட்டங்களையும் நடத்தியுள்ளது. அதேநேரத்தில் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படும் சிப்காட் வளாகங்கள் பிறரின் வாழ்வாதாரத்தை பறிப்பதாக இருக்கக்கூடாது.

சென்னை- சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். இப்போதும் அத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமரிடம் மனு அளித்திருக்கிறார். பாமகவை போலவே அத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினும் எதிர்ப்பதற்கான முதன்மைக் காரணம், அதனால் உழவர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்பது தான். அதே காரணம் பாலியப்பட்டு சிப்காட் திட்டத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கும் பொருந்தும்.

எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சிக்கலில் உடனடியாக தலையிட வேண்டும். போராடி வரும் உழவர்களுடன் பேச்சு நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கான சிப்காட் வளாகத்தை யாருக்கும் பாதிப்பில்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் இனி அமைக்கப்படும் சிப்காட் தொழிற்பேட்டைகள் தரிசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், ஏற்கனவே தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலவங்கிக்கு சொந்தமான இடங்களில் தான் அமைக்கப்படும் என்பதை அரசின் கொள்கை முடிவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: