தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 அரசு மருத்துவ கல்லூரிகள் திறப்பு: பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.4,080 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் செம்மொழி  தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான புதிய கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதன்மூலம் இந்த ஆண்டு தமிழகத்திற்கு 1,450 எம்பிபிஎஸ் படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக கிடைக்கும். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று காணொலி காட்சி வாயிலாக தமிழகத்தில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரூ.4,080 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும், சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.  

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான குறியீடுகளில் ஒன்றாக, மக்கள் நல்வாழ்வு விளங்கி வருகிறது. மக்கள் நல்வாழ்வு என்பது, மாநிலத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகள், மனிதவளம் மட்டுமல்லாமல், மாநிலத்தில் வாழும் மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் சார்ந்தது. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம் போன்ற மக்கள் நல்வாழ்விற்கான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, தமிழகத்தில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை அளித்திடும் வகையில், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவ கல்லூரி அமைத்திட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  

அந்த வகையில், அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களான விருதுநகர், கள்ளக்குறிச்சி,  நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளை பிரதமர் டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 1450 எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த 11 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் 11,200 மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பணியாளர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம், இம்மாவட்டங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் சுமார் ஒன்றரை கோடி மக்களுக்கு தரமான உயர் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

முத்தமிழறிஞர் கலைஞர் மேற்கொண்ட பெரும் முயற்சியால், உலகின் மூத்த மொழியாம், சொல் வளமும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை 14.10.2004  அன்று ஒன்றிய அரசு செம்மொழியாக அறிவித்தது. அதனை தொடர்ந்து கலைஞரால் 18.8.2007 அன்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கி வைக்கப்பட்டது. கலைஞர் முதலமைச்சராக பதவியில் இருந்தபோது 2007ம் ஆண்டு சென்னை, பெரும்பாக்கத்தில் 16.586 ஏக்கர் நிலத்தை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வழங்கினார். அந்நிலத்தில் ரூ.24.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டிடத்தை பிரதமர் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக ஒன்றிய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், தலைமைச் செயலகத்தில் இருந்து பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 1450 எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த 11 அரசு மருத்துவ  கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் 11,200 மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பணியாளர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம், இம்மாவட்டங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் சுமார் ஒன்றரை கோடி  மக்களுக்கு தரமான உயர் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கவும் வழிவகை  செய்யப்பட்டுள்ளது.

Related Stories: