விழுப்புரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி திடீரென ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு: போலீசார் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி திடீரென ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் அடுத்த ரோசனைப்பாட்டை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் சங்கர். 30 வயதான இவர் அப்பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கு ஒன்றில் திண்டிவனம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி விழுப்புரம் அடுத்த வேடம்பட்டியிலுள்ள விழுப்புரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு சிறையில் இருந்த சங்கர் 2 முறை ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சங்கரை இன்று காலை 4.30 மணி அளவில் சிறையிலுருந்து முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சங்கர் இன்று காலை 7.15 மணியளவில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். சிறையில் ரத்த வாந்தி எடுத்த விசாரணை கைதி சங்கர் சிகிக்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.       

Related Stories: