×

ஆபாச டிவிட் விவகாரம் சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் சித்தார்த்

சென்னை: சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பாதியிலேயே சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார். இதையடுத்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், ‘பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துகொண்டால், எந்தவொரு நாடும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது’ என்று பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்துகளை குறிப்பிட்டிருந்தார். சாய்னாவின் பதிவுக்கு நடிகர் சித்தார்த் ஆபாசமான வார்த்தைகளால் பதில் அளித்திருந்தார். அவரது பதிவுக்கு டிவிட்டரில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சாய்னா நேவாலை ஆபாசமாக விமர்சித்த விவகாரத்தில் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிரா மற்றும் தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளித்தது.

இந்நிலையில் சாய்னா நேவாலுக்கு கடிதம் ஒன்றை சித்தார்த் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் உங்களிடம் பலவற்றில் கருத்து முரண்படலாம். ஆனால் உங்கள் டிவிட்டை படித்தபோது எனக்கு உண்டான கோபம் மற்றும் ஏமாற்றம் எந்த வகையிலும் என் தொனி மற்றும் சொற்களை நியாயப்படுத்தாது. நான் நகைச்சுவைக்காக குறிப்பிட நினைத்த விஷயம், விவகாரமாகிவிட்டது. உங்களை விமர்சித்து பகிர்ந்த டிவிட்டை விட எனக்குள் மேலும் கனிவுண்டு என்று எனக்குத் தெரியும். பலரும் கூறுவது போல எனது வார்த்தைகள் மற்றும் நகைச்சுவை எந்தவிதமான தவறான நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

நான் பெண்ணியத்தை தீவிரமாக ஆதரிப்பவன். எனது டிவிட்டர் பதிவில் நான் மறைமுகமாக எவ்விதமான பாலின பாகுபாட்டையும் வெளிப்படுத்தவில்லை என்பதை உறுதிபட கூறுகிறேன். ஒரு பெண் என்பதால் உங்களைத் தாக்கிப் பேச வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. நான் பதிந்த முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். நடந்தவற்றை ஒதுக்கிவைத்து இந்த கடிதத்தை நீங்கள் ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்பொழுதும் என் சாம்பியன். இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார்.

Tags : Siddharth ,Saina Neval , Porn Tweet, Saina Neva, Sorry, Siddharth
× RELATED அதிதியுடன் திருமணம் எப்போது? சித்தார்த் பதில்