×

ஒரகடம் அருகே நண்பர்களுக்கிடையே வாய்த்தகராறு வாலிபர் கத்தியால் சரமாரி குத்திக் கொலை

ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் அருகே 2 நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில், நேற்றிரவு ஒரு வாலிபரை கஞ்சா போதையில் இருந்த நண்பர் கத்தியால் சரமாரி குத்திக் கொலை செய்துவிட்டு தப்பினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியை சேர்ந்தவர் சந்துரு (26). இவர், அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் வேலைக்கு செல்லாமல், எப்போதும் கஞ்சா போதையில் இருந்து வந்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் நண்பர்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை வாரணவாசி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த சந்துரு, தினேஷ் ஆகிய இருவரும் போதையில் ஒரு நிலப் பிரச்னை தொடர்பாக வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் இருவரும் சரமாரி தாக்கிக் கொண்டனர். அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் வீடு திரும்பிய சந்துரு, வீட்டுக்கு வெளியே கட்டிலில் மதுபோதையில் தூங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில் சந்துருவின் வீட்டுக்கு தினேஷ் வந்துள்ளார். அங்கு கட்டிலில் தூங்கிய சந்துருவை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவரது மார்பு, வயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கத்திக்குத்து விழுந்ததில் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்ததும் கஞ்சா போதையில் இருந்த தினேஷ் தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த சந்துருவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்திலேயே சந்துரு பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஒரகடம் போலீசார் விரைந்து வந்தனர். சந்துருவின் சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சந்துருவின் தந்தை ஜெகதீசன் (43) என்பவர் அளித்த புகாரின்பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இவர்கள் இருவருக்கும் நிலப் பிரச்னை தொடர்பாக தகராறா, பெண் விவகாரமா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், தலைமறைவான தினேஷை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Valibur ,Orakadam , Once upon a time, between friends, an argument, a teenager, murder
× RELATED காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரியில் இடியுடன் கூடிய கனமழை..!!