முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விழா தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளு்கு காணொலி வாயிலாக திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

சென்னை:  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில், தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டிடத்தை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த கல்லூரிகள் மூலம் 1650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.  தமிழகத்தில் தற்போது 25 அரசு மருத்துவ கல்லூரிகளும், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. இதில் எம்பிபிஎஸ் படிப்பில் 3,550 இடங்களும், பல் மருத்துவ படிப்பில் 194 இடங்களும் உள்ளன. இந்த நிலையில் மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்கள் அனைத்திலும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த 11 மாவட்டங்களிலும் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பில் மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் தலா 150 மாணவர்கள் வீதம் 1,650 மாணவர்களை சேர்ப்பதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து இந்த கல்வியாண்டு (2021-2022ம்) முதல் புதிதாக தொடங்க உள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கல்லூரிகளை இன்று (12ம் தேதி) விருதுநகரில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைப்பார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடியுடன், முதல்வர் மு.க.ஸ்டாலினும் விழாவில் பங்கேற்க இருந்தார்.  பிரதமர் தமிழகம் வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வந்தது. இதற்கு பிரதமர் மோடியும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ”தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும் திட்டமிட்டபடி ஜனவரி 12ம் தேதி (இன்று) பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகவே திறந்து வைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் செய்து வந்தனர்.

மேலும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். மேலும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கல்லூரிகளில் 1,650 மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.  மேலும், 11,207 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர ஊழியர்களின் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஒவ்வொரு மருத்துவ கல்லூரிகளிலும் 33 மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகள் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 11 அரசு புதிய கல்லூரிகள் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த மருத்துவ கல்லூரி கட்டிடங்கள் அனைத்தும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி உரை:

தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கம், தை பிறந்தால் வழி பிறக்கும், தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசினார். ஒரே நாளில் ஒரு மாநிலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது தமிழ்நாட்டில்தான் என கூறினார். மருத்துவமனை எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா உயர்த்தியுள்ளது என தெரிவித்தார். நாடு முழுவதும் தற்போது 590 மருத்துவ கல்லூரிகள் உள்ளன,  22 எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன என கூறினார். நாட்டில் மருத்துவ இடங்கள் 80 சதவீதம் அதிகரித்துள்ளன என பேசினார். பனாரஸ் பல்கலை.யில் சுப்பிரமணிய பாரதிக்காக ஒரு இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலத்தவரும் தமிழை கற்றுக்கொள்ள இணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

முதல்வர் கோரிக்கை:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என பிரதமரிடம் மோடி கோரிக்கை வைத்தார். மருத்துவ படிப்பில் ஏற்கனவே இருந்த நடைமுறையே பின்பற்ற ஒன்றிய அரசு உதவ வேண்டும் எனவும், மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்பதே திமுகவின் குறிக்கோள், கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்தியாவில் தரமான மருத்துவ வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என கூறினார். செம்மொழி தமிழாய்வு நிறுவனம் திருக்குறளை பல மொழிகளில் மொழி பெயர்த்துள்ளது என கூறினார்.

Related Stories: