×

180 ஏக்கர் அரசு நிலம் அதிமுகவினர் உட்பட பலருக்கு பட்டா மாறுதல்: வருவாய் கோட்டாட்சியர்கள் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு

தேனி: அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களை அதிமுகவினர் உள்ளிட்ட தனிநபர்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து மெகா மோசடி செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 180 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்த வழக்கில் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், நில அளவையர்கள் என 7 பேரை கடந்த அக்டோபர் மாதம் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் அபகரிக்கப்பட்ட அரசு நிலங்களின் பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு அவை நீக்கப்பட்டது.

தொடர்ந்து மோசடி நடைபெற்ற காலகட்டத்தில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர்களாக பணிபுரிந்த ஆனந்தி, ஜெயப்பிரிதா, பெரியகுளம் வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள், நில அளவையர்கள், அரசு நிலத்திற்கு பட்டா பெற்ற அதிமுக முன்னாள் நிர்வாகி அன்னப்பிரகாஷ் உட்பட பலர் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பட்டா மாறுதல் தொடர்பான மெகா மோசடி தொடர்பான இந்த வழக்கு கடந்த 4ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி சரவணன் தலைமையில் முதற்கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. நேற்று மாலை அதிமுக பெரியகுளம் முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் மற்றும் நில அளவையர் பிச்சமணி ஆகியோரிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக டிஎஸ்பி விசாரணை நடத்தினார். அடுத்து பெரியகுளம் கோட்டாட்சியர்களாக பணியாற்றிய ஆனந்தி மற்றும் ஜெயப்பிரிதாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கியதால் பட்டா மாறுதலில் நடைபெற்ற மெகா மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Tags : Batta , patta
× RELATED பட்டா விவகாரம்: மாயாஜால் நிலத்துக்கு...