×

பிரேசிலில் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் காரியோகா அணை உடையும் நிலை: 2019 ஆம் ஆண்டு பழைய அணை உடைந்ததில் 300 சுரங்க தொழிலாளர்கள் பலி

பிரசிலியா: பிரேசில் நாட்டில் உள்ள மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் கனமழையால் நிரம்பி வழியும் அணை எப்போது வேண்டுமானாலும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2019 ஆம் ஆண்டு 300 பேரின் உயிரை குடித்த அணை விபத்து போன்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. பிரேசில் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவருகிறது. இதனால் இந்த மாகாணத்தின் தென்கிழக்கில் உள்ள பாராஜிமினாஸ் நகர் அருகே உள்ள காரியோகா என்ற அணை நிரம்பி வழிந்து வருகிறது. கனமழை மேலும் ஒருவாரத்திற்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் இந்த அணை உடையும் அபாயம் உருவாகியிருக்கிறது.

அணைக்கு கீழே 5 நகரங்களில் மக்கள் வசித்து வருவதால் மிகப்பெரிய உயிர்சேதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் அதிகரித்து வருகிறது. இந்த அணை எப்போதும் இது போன்று அபாயகரமாக நிரம்பியது இல்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அணை உடையாமல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் பீதியுடன் தெரிவித்துள்ளனர். வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்லாயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்த கனமழையால் கடந்த 8 ஆம் தேதி கேபிடோலியோ பகுதியில் அமைந்துள்ள ஃபர்னாஸ் நீர்வீழ்ச்சியில் ராட்ஷத பாறை விழுந்து 10 பேர் மரணமடைந்தனர். பிரேசில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி ஹாரிஸண்டே நகருக்கு தென்மேற்கே புருமடின்கோ என்ற நகருக்கு அருகில் பழைய அணை ஒன்று உடைந்து விபத்து ஏற்பட்டது. அப்போது சுரங்கத்தில் தண்ணீர் புகுந்ததில் ஏறக்குறைய 300 தொழிலாளர்கள் மரணமடைந்தனர். அதே போன்று நடந்து விடக்கூடாது என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.               


Tags : Carioca Dam Breakdown ,Minas Gerais, Brazil , Brazil, Minas Gerais, Carioca Dam, 2019, old dam, miners, killed
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!