×

கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு பொங்கல் விற்பனைக்கு தயாராகும் குஜிலியம்பாறை மண்பானைகள்: தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

குஜிலியம்பாறை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மண்பானை விற்பனை செய்ய குஜிலியம்பாறையில் மண்பானை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு கிராமப்புற மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையில் மண்பானை முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புற பகுதிகளில் இன்றும் மண்பானையிலேயே வீட்டு பொங்கல் வைத்து வருகின்றனர். இந்நிலையில், குஜிலியம்பாறை அரசு மேல்நிலைபள்ளி சாலையில் உள்ள சாலையூரில் 15க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள அனைவரும் மண்பானை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் தயாரிப்பில் உருவாகும் மண்பானை பொங்கல் பண்டிகை நாட்களில் கரூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், பிற மாவட்டங்களுக்கு பண்பானையை விற்பனை செய்வதற்கு, மண்பானை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சாலையூரை சேர்ந்த சுப்பிரமணி கூறுகையில், ‘கடந்த மூன்று தலைமுறையாக இத்தொழில் செய்து வருகிறேன். பொங்கல் பண்டிகை காலங்களில் மட்டுமே மண்பானை செய்யும் தொழில் உள்ளது. பொங்கல் பண்டிக்கைக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே, களிமண்னை கொண்டு வந்து உலர வைத்து அதனை பக்குவபடுத்தி மண்பானை தயார் செய்யும் பணி செய்ய வேண்டி உள்ளது.

நாங்கள் தயாரிக்கும் மண்பானைகள் பொங்கல் பண்டிகை நாட்களில் விற்பனை செய்ய கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள வியாபாரிகள் எங்களிடம் வாங்கி செல்கின்றனர். எங்களிடம் ஒரு மண்பானை ரூ.40க்கு குறைந்த விலைக்கு வாங்கி வெளி மார்க்கெட்டில் ஒரு மண்பானையின் விலை ரூ.300 வரைக்கும் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்ய தற்போது உள்ள நிலையில் செலவு அதிகமாகிறது. ஆனால் அதற்கேற்ப வருவாய் இல்லை. மண் அடுப்பு, மண்பானைகளை பொதுமக்கள் வாங்கி செல்வதில் ஆர்வம் இல்லை.

மண்பானை பொருட்கள் குறித்து பொதுமக்களிடையே இன்னும் போதுமான விழிப்புணர்வு இல்லை. பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களை நம்பி மண்பானை தொழில் செய்தால் வருமானம் இல்லாமல் போய்விடும். வெளிமாவட்ட வியாபாரிகளை நம்பியே இத்தொழில் செய்ய வேண்டி உள்ளது. பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மண்பானை தொழில் தயாரிக்கும் பணி மும்முரமாக உள்ளது’ என்றார்.

மண்பானை சமையலால் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது
ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சி ஊராட்சியை சேர்ந்த சாமியார்புதூரில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் பானைகள் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 15க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், பொங்கல் பானை தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தயார் நிலையில் உள்ள பொங்கல் பானைகளை திண்டுக்கல், மூலனூர், பழனி, ஒட்டன்சத்திரம், மார்க்கம்பட்டி, இடையகோட்டை ஆகிய ஊர்களில் உள்ள மொத்த வியபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு மதுரை, தேனி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு எடுத்துச் சென்று மொத்த வியாபாரிகள் விற்பனை செய்யப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். பொங்கல் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறுகையில்,`` தற்போது பல உணவகங்களில் மண்பானை சமையல் என்ற பெயரில் உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் மண்பானை பொருட்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது’’ என்று கூறினர்.

Tags : Kujilyamparai ,Pongal ,Karur ,Tiruppur ,Erode , Pongal Sale, Kujilyamparai Pottery, Workers
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்