பொங்கல் விற்பனை களை கட்டியது மேலப்பாளையம் சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரிப்பு

நெல்லை: பொங்கல் விற்பனையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில்  ஆடுகள் வரத்து அதிகமாக காணப்பட்டது. ரூ.10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை ஆடுகளை விலை பேசி வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். தென்மாவட்டங்களில் எட்டயபுரம் மற்றும் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தைகள் புகழ் பெற்றவையாகும். இச்சந்தைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை வாரம்ேதாறும் செவ்வாய்கிழமை நடந்து வருகிறது. இச்சந்தைக்கு ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும். மாடுகள், கோழிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தனித்தனி இடங்களில் நடப்பது வழக்கம்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 14ம்தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்ேவறு இடங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடு, மாடுகளோடு சந்தையில் குவிந்தனர். ஆடு ஒன்றுக்கு ரூ.50 கட்டணமும், மாடு ஒன்றுக்கு ரூ.100 கட்டணமும் கொடுத்து சந்தைக்குள் சென்று வியாபாரத்தை களை கட்ட வைத்தனர். சந்தையை ஒட்டியுள்ள நேதாஜி சாலை, மேலப்பாளையம் சக்திநகர் பகுதியிலும் வியாபாரிகள் கோழிகள் மற்றும் மீன் விற்பனைக்காக குவிந்தனர்.

அரசின் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள் அமலில் உள்ள சூழலில், சந்தையில் நுழைவோருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை நடந்தது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான மாட்டுப் பொங்கல் தினத்தன்று கறி விற்பனை எப்போதுமே களை கட்டுவது வழக்கம். இதற்காக ஆடுகள் தேவை அதிகரித்துள்ள சூழலில் மேலப்பாளையம் சந்தையில் தரமான ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. நடுத்தர ஆடுகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மேலப்பாளையம் சந்தையில் விலையும், விற்பனையும் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோழிகளை பொறுத்தவரை கிலோ ரூ.500 என விற்பனையாகின. கறிக்கடை வைத்திருப்போர் மொத்தமாக செம்மறி ஆடுகளை விலைபேசி வாங்கிச் சென்றனர்.

Related Stories: