திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு இரவு நேரங்களில் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் திண்டாட்டம்

நெல்லை: இரவு நேர ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை செல்வோர் திண்டாட்டத்தில் உள்ளனர். பகல் ெபாழுதில் வெயில் கொடுமையை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் ேகாயிலுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருவர். பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். நெல்லை - திருச்செந்தூர் சாலை, தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை, நாகர்கோவில் - திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட சாலைகள் பகல் பொழுதில் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது.

மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலிருந்து வருவோர் அதிகாலையில் நெல்லையை அடைந்து கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி புறப்பட்டுச் செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பச்சை ஆடை உடுத்திய ஆண், பெண் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு காரணமாக பல்வேறு இடங்களில் பக்தர்கள் இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பக்தர்களை போலீசார் பாதயாத்திரை செல்ல விடுவதில்லை. ஆலங்குளம், நெல்லை மாநகர பகுதிகளில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, படுத்து தூங்கிச் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலை அடைய காலதாமதம் ஆவதாக தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக பாபநாசம், விகேபுரம், பாவூர்சத்திரம், விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் திருச்செந்தூர் சென்றடைய விரும்புவர். ஆனால் இரவு நேர ஊரடங்கால் அவர்கள் பயணம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முருக பக்தர்கள் கூறுகையில், ‘‘பகலில் வெயில் கொடுமை காரணமாக பக்தர்கள் எப்போதும் இரவு நேர பயணங்களையும், அதிகாலை பயணங்களையுமே அதிகம் விரும்புவர். நள்ளிரவு நேரங்களிலும், பிற்பகல் வேளைகளிலும் கிடைக்கிற இடத்தில் ஓய்வெடுத்து பாதயாத்திரை செல்வோம். இவ்வாண்டு இரவு நேர ஊரடங்கு காரணமாக பகல் பொழுது முழுவதும் பயணிக்க வேண்டியதுள்ளது.

பகல் நேர சூட்டில் பயணிப்பதால் காலில் கொப்புளம், வெடிப்பு உண்டாகிறது. மேலும் திருச்செந்தூர் சென்று சேர கூடுதல் கால அவகாசமும் தேவைப்படுகிறது. அலகு குத்தி வரும் பக்தர்களும், விரதமிருந்து வரும் பக்தர்களும் இரவு நேரங்களில் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்’’ என்றனர். இரவு நேர ஊரடங்கு காரணமாக நெல்லை கலெக்டர் அலுவலக சாலை, வண்ணார் பேட்டை, பாளை வி.எம் சத்திரம் சாலைகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: