அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால் எச்சரிக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தில் தானியங்கி தொலை உணர்கருவிகள்

சென்னை: அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால் எச்சரிக்கை விடுக்கும் வகையில் தானியங்கி தொலை உணர்கருவிகள் சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது ஓடு தளத்தில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் 1948ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் நெரிசலும் பரபரப்பும் மிகுந்த 6வது விமான நிலையமாக தற்போது விளங்குகிறது. 1990களுக்கு பின்னர் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 1323 ஏக்கர் கொண்ட சென்னை விமான நிலையத்தின் 2வது தளம் அடையாற்றின் குறுக்கே மேல்பாலம் எழுப்பி அமைக்கப்பட்டுள்ளது. ஓடுபாதைகள் 20 மீட்டருக்கு மேல் உயரமாக எழுப்பப்பட்டுள்ளன. ஆனாலும் மழைக்காலத்தில் அடையாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் விமான நிலையத்திற்குள் மழைநீர் புகும் சூழல் உள்ளது. அதற்கு உதாரணமாக 2015ஆம் அண்டை சொல்லலாம். அப்போது ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் சென்னை விமான நிலையம் 5 நாட்களுக்கு மூடப்பட்டது.

வெள்ளம் வருவது தெரியாமல் ஓடுபாதை மற்றும் விமான தளத்தில் 20க்கும் மேற்பட்ட வானூர்திகள் சிக்கின. எனவே இத்தகைய இடர்பாடுகளை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக செயல்படும் வகையில் விமான நிலையத்தில் தானியங்கி தொலைஉணர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால் எச்சரிக்கும் வகையில் ஓடுபாதை பாலம் தளத்தில் இக்கருவி நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அடையாறு ஆற்றின் நீர்மட்டங்களில் உள்ள மாறுபாட்டை பதிவு செய்து தகவல்களை விமான நிலைய கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தொடர்ந்து அனுப்பும். நீர்மட்டம் 9.5 மீட்டருக்கு மேல் பெருகும் போது இந்த கருவி கட்டுப்பாட்டு மையத்தில் எச்சரிக்கையை ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலைய செயல்பாடுகளுக்கு பொறுப்பான 10 முக்கிய அதிகாரிகளின் கைபேசிக்கும் எச்சரிக்கை செய்திகளை அனுப்பும். இந்த வசதி மூலம் சென்னை விமான நிலையம் மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட முடியும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: