×

ஜெயங்கொண்டம் அருகே தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க போராடும் 72 வயது முதியவர்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே தமிழ்நாடு அரசின் முதியோர் உதவித்தொகையை பெறுவதற்கு உயிருடன் இருப்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு முதியவர் ஒருவர் தள்ளப்பட்டுள்ளார். முத்துவாஞ்சேரியை சேர்ந்த கோவிந்தன் என்ற 72 வயது முதியவர் அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகையான 1000 ரூபாயை பெறுவதற்காக சேவை மையத்திற்கு சென்றுள்ளார். வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தை எடுக்க கைரேகை வைத்த போது பதிவாகாததால் பணத்தை பெற முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தன் ஸ்ரீபுரந்தானில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அவர் இறந்துவிட்டதாக அரசு கோப்பில் பதிவாகி இருப்பதாக திடுக்கிட வைத்துள்ளனர்.

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை பெற்று வரக்கூறியதை அடுத்து விஏஓவிடம் இருந்து பெற்று வங்கியிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால் அதையும் ஏற்க மறுத்த வங்கி வட்டாட்சியரிடம் சான்றிதழ் பெற்றுவர கூறியுள்ளனர். அரசு அளிக்கும் 1000 ரூபாய் முதியோர் உதவித்தொகை மூலம் தன் வாழ்க்கையை நடத்தி வரும் 72 வயது முதியவர் தற்போது தான் மீண்டும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை பெறுவதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து காத்திருக்கிறார்.

Tags : Jayangondam , Elderly, registered as deceased, bank, old age allowance
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...