×

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரினார்!!

சென்னை : பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரினார். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வீண் விவாதங்களை ஏற்படுத்த நடிகர் சித்தார்த் முயன்று வருவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலிவுட்டில் கங்கனா ரனாவத், ராம்கோபால் வர்மா ஆகியோர் இதுபோல் எந்த ஒரு பிரச்னையிலும் மூக்கை நுழைத்து தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் சர்ச் சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். அதே பாணியில், நடிகர் சித்தார்த்தும் நீண்ட காலமாக இதுபோன்ற கருத்துக்களை கூறி வருகிறார்.  சமீபத்தில் சாய்னா நேவாலை ஆபாச வார்த்தையில் அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி  உள்ளது.

பஞ்சாப்பில் பிரதமர் மோடி பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாக விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டிவிட்டர் பதிவில், ‘நாட்டின்  பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்’என்று கூறியிருந்தார்.

இதற்கு நடிகர் சித்தார்த் பதில் டிவிட் போட்டார். அவரது வார்த்தைகள் ஆபாசமாக அர்த்தம் கொள்ளும்படியாக இருந்ததால் சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தை விசாரித்து நடிகர் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையமும் மகாராஷ்டிரா காவல் துறையை கேட்டுக் கொண்டது. இந்த நிலையில் தமது கருத்திற்கு சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார்.ட்விட்டரில் மன்னிப்பு கடிதத்தை வெளியிட்ட அவர்,தமது மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக மன்னிப்பு கேட்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். தமது கருத்தில் உள்நோக்கம் கொண்டிருக்கவில்லை என்று கூறியுள்ள சித்தார்த், தாம் எப்போதும் பெண்ணியவாதிகள் பக்கம் இருப்பவர் என்றும் ஒரு பெண்ணாக உங்களை தாக்கும் எண்ணம் கிடையாது என்றும் சாய்னா நேவாலுக்கான கடிதத்தில் கூறியுள்ளார். எனவே மன்னிப்பு கடிதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற் நம்புவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சித்தார்த், நீங்கள எப்போதும் எனது சாம்பியனாக இருப்பீர்கள் என்று கூறியுள்ளார்.


Tags : Siddharth ,Saina Nehwal , இந்திய பேட்மிண்டன், வீராங்கனை ,சாய்னா நேவால், நடிகர் சித்தார்த்
× RELATED அதிதியுடன் திருமணம் எப்போது? சித்தார்த் பதில்