காட்பாடி ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் இருந்து விழுந்து ரயில் அடியில் சிக்கிய தாய், குழந்தை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதி

வேலூர்: காட்பாடி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து தவறி விழுந்து ரயிலின் அடியில் சிக்கிய தாயும், குழந்தையும் உயிருடன் மீட்கப்பட்டனர். பொங்கலையொட்டி வெளியூர் செல்ல காட்பாடி ரயில் நிலையத்தில் நேற்று அதிகளவில் கூட்டம் அலைமோதியது. காலை 10.30 மணியளவில் 8 மாத ஆண் குழந்தையுடன் நடந்து சென்ற பெண் திடீரென பிளாட்பாரத்தில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு அவர் மயங்கினார். சிறிது நேரத்தில் குழந்தையும் மயங்கியது. அதேநேரம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பிளாட்பாரத்தில் நின்றது.

இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக செயல்பட்ட ரயில்வே போலீசார் ரயிலை சிறிது நேரம் பிளாட்பாரத்தில் நிறுத்தும்படி செய்தனர். பின்னர் ரயிலின் அடியில் தண்டவாளத்தின் நடுவில் மயங்கிய நிலையில் கிடந்த தாயையும், குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். இதில் குழந்தை காயமின்றி தப்பியது. தாய் தலையில் பலத்த காயத்துடன் மயக்கத்தில் இருந்ததால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, அந்த தாய், குழந்தை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தாயையும், சேயையும் மீட்ட ரயில்வே போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories: