×

படப்பை குணாவை என்கவுன்டர் செய்ய கூடாது என கோரி மனைவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பிரபல ரவுடி படப்பை குணா, காவல்துறையால் என்கவுன்டர் செய்யப்படலாம் என்று அச்சம் தெரிவித்து அவரது மனைவி எல்லம்மாள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தற்போது தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அவரது மனைவி எல்லம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், வழக்குகளில் சரணடைய தனது கணவர் தயாராக உள்ள நிலையில், புறநகர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியால் என்கவுன்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தனது கணவர் குணாவை என்கவுன்டர் செய்யக்கூடாது என்று அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அச்சப்படும் வகையில் என்கவுன்டர் திட்டம் ஏதும் இல்லை. சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் அனுமானம் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என கூறி எல்லம்மாளின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Dismissal of wife's lawsuit seeking not to encounter image guna: iCourt order
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...