குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் 2வது நாளாக போராட்டம்

துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள வீடுகள் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், அதை அகற்றும்படியும் வருவாய்த் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அதிகாரிகள் இங்குள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இங்கு மீண்டும் வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்புவாசிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர். 2வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பாட்டாளி மக்கள் கட்சியினர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன்  கூறுகையில், பெத்தேல் நகர் குடியிப்புவாசிகள் தரப்பில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர், சென்னை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களை வரும் 20ம் தேதி ஆஜராகும்படி நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இந்தநிலையில் வருவாய்த் துறையினர், 3 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இது சட்டவிரோதமானது, என்றார். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஏற்று இரவு 7 மணிக்கு போராட்டம் கைவிடப் பட்டது.

Related Stories: