×

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கும் அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின பொது பிரிவுக்கு 16 வார்டுகள், பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகள் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 168 இடங்களில் பெண்களுக்கு 89 இடங்களும், பொது பிரிவிற்கு 79 இடங்களும் ஒதுக்கி கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

கடந்த 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடாக 84 இடங்கள் தான் ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால், இந்த அறிவிப்பாணை அடிப்படையில் பெண்களுக்கு விதிமுறைகளுக்கு முரணாக 50 சதவீதத்திற்கும் அதிகமாக வார்டுகள் கிடைக்கிறது.

இந்நிலையில், மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின்  ஒட்டுமொத்த வார்டுகளையும் பொது பிரிவிற்கும், பெண்களுக்கும் சமமாக  பிரித்து வழங்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் பார்த்திபன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், மண்டல வாரியாக வார்டுகளை பிரித்து ஒற்றைப்படையில் உபரியாக இருக்கும் வார்டை பெண்களுக்கு ஒதுக்குவதால், அவர்களுக்கு பொது வார்டுகளை விட கூடுதல் வார்டுகள் ஒதுக்கும் நிலை உள்ளது, என்றார்.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், மண்டல வாரியாக பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 இடங்களில் 105 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. மொத்த இடங்களில்தான் 50 சதவீதம் பெண்களுக்கு வழங்க வேண்டுமே தவிர மண்டல வாரியாக வழங்கக்கூடாது. பெண்களுகு 50 சதவீதம் வழங்குவதை எதிர்க்கவில்லை. ஆனால், 50 சதவீதத்தை தாண்டிவிடக்கூடாது என்று வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, சென்னையை பொறுத்தவரை மத்திய பகுதியில்தான் பெண்கள் அதிகம். புறநகர் பகுதிகளில் குறைவு என்பதால் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில், விதிகளுக்கு உட்பட்டு மண்டல வாரியாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில்தான் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதை மீறக்கூடாது. அதனடிப்படையில், பெண்களுக்கு மண்டல வாரியாக ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது.
 பெண்களுக்கு வழங்குவதை மனுதாரர் எதிர்க்கவில்லை என்பதால், 50 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் தேர்தல் நடத்தலாம். ஆனால், அது மொத்த வார்டுகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை  முடித்துவைத்தனர்.

Tags : Chennai Corporation , Chennai Corporation cancels ward allotment notice for women zone wise: High Court order
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...