×

கடனில் சிக்கித் தவிக்கும் வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் 36% பங்கு அரசு வசமாகிறது

புதுடெல்லி: கடனில் சிக்கித் தவிக்கும் வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் 35.8 சதவீத பங்குகள் ஒன்றிய அரசின் வசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தின் வோடபோன் நிறுவனமும், இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலார் நிறுவனமும் இணைந்து விஐ (வோடபோன்-ஐடியா) என்ற பெயரில் தொலைதொடர்பு நிறுவனமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் சுமார் ரூ.1.96 லட்சம் கோடி கடுமையான கடனில் தத்தளிக்கிறது. சமீபத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு சில சலுகைகளை வழங்கியது. அதன்படி, தொலைதொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஸ்பெக்ட்ரம் கட்டணம் மற்றும் ஏஜிஆர் நிலுவைத் தொகைக்கான வட்டியை மூலதன பங்குகளாக மாற்றிக் கொள்ளலாம் என கூறியது.

அதன்படி, வோடபோன்-ஐடியா நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய வட்டி நிலுவைத் தொகை ரூ.16,000 கோடியை, ஒன்றிய அரசுக்கு பங்கு மூலதனமாக வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் கணக்குப்படி, அரசுக்கு செலுத்த வேண்டிய வட்டியின் தற்போதைய நிகர மதிப்பு ரூ.16,000 கோடியாக கணக்கிட்டுள்ளது. இதை மூலதன பங்காக மாற்றும் பட்சத்தில் நிறுவனத்தின் 35.8 சதவீத பங்குகள் ஒன்றிய அரசின் வசமாகும். இதன் மூலம், இந்நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கொண்ட பங்குதாரராக ஒன்றிய அரசு மாறும். வோடபோன் குழுமத்தின் பங்கு 28.5 சதவீதமாகவும், ஆதித்யா பிர்லா குழுமத்தின் பங்கு 17.8 சதவீதமாகவும் இருக்கும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் விஐ நிறுவன பங்குகள் நேற்று லேசான சரிவை கண்டன.

Tags : Vodafone ,Idea , The government owns 36% of the debt-ridden Vodafone-Idea
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்...