×

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: ஒலியை விட 3 மடங்கு அதிக வேகம்

புதுடெல்லி: ஒலியை விட 3 மடங்கு அதிக வேகமாக பறந்து தாக்கும் மேம்பட்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இந்திய-ரஷ்ய கூட்டு தயாரிப்பாகும். இந்த ஏவுகணையை கடலுக்கடியில் இருந்தும், கப்பல், விமானம், நிலத்தில் இருந்தும் விண்ணில் செலுத்தி குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். இது குறித்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் தனது டிவிட்டரில், ‘கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் பிரமோஸ் சூப்பர்சோனிக் மேம்பட்ட ஏவுகணை, ‘ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்’ என்ற போர் கப்பலில் இருந்து நேற்று ஏவி பரிசோதிக்கப்பட்டது. அது, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கப்பலை துல்லியாக தாக்கி அழித்து வெற்றி பெற்றது,’ என குறிப்பிட்டுள்ளது.

வழக்கமாக, ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில்தான் இதுபோன்ற ஏவுகணைகளின் சோதனை நடைபெறும். ஆனால், நேற்று இந்த சோதனை எங்கு நடத்தப்பட்டது என்ற விவரம் கூறப்படவில்லை. இந்நிலையில், இந்திய கடற்படைக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘பிரமோஸ் மேம்பட்ட சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியால் இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையை வெற்றிகரமாக்கிய குழுவுக்கு வாழ்த்துக்கள்.’ என குறிப்பிட்டுள்ளார்.

* பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நேற்று வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது. இதை வீரர்களே கைகளில் தூக்கிச் சென்று, இலக்கை நோக்கி வீச முடியும் என்பது மிகப்பெரிய சிறப்பு அம்சம்.


Tags : Promos missile test success: 3 times faster than sound
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...